மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன: சென்னை மாநகராட்சி 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த ஓராண்டில் மட்டும் 964 கி.மீட்டர் அளவு நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்கதீப் சிங் பேடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த அதிக மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் நீண்டகாலம் வடியாமல் இருந்தது. அதை சரிசெய்வதற்காக தமிழக அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக கடந்த சில மாதங்களில், குறிப்பாக கடந்த ஏழெட்டு மாதங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில், சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதவிர நெடுஞ்சாலைத்துறை மூலமாக மழைநீர் வடிகால் வசதிகள் சென்னை நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, செம்மஞ்சேரி பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. நீர்வளத்துறை சார்பிலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த ஓராண்டில் மட்டும் 964 கி.மீட்டர் அளவு நடைபெற்று வருகின்றன. சென்னையில் மண்டல அளவில் 224 கி.மீட்டர் அளவு பணிகள் நடைபெற்று வருகின்றன. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் இதற்காக தமிழக அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு மழைநீர் தேங்கிய இடங்களான, சீதாம்மாள் காலனி, தியாகராயநகர், பசுல்லா ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, அசோக்நகர், மாம்பலம், விருகம்பாக்கம், அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், நீண்டகாலமாக மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கும். அதற்காகவும் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன.

நேற்று தலைமைச் செயலாளர் ஆய்வு செய்த ஜிஎன் செட்டி சாலையில் அங்கு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அதேநேரத்தில் நீண்டகாலப் பணிகள்கூட சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொசஸ்தலை ஆறு மற்றும் கோவளம் ஆகிய திட்டங்களின் கீழ் இந்த நீண்டகால பணிகள், திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இது 3 ஆண்டுகால திட்டம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in