

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது. தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்குத் திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, அக். 25 (நாளை) அதிகாலை வங்கதேச கடற்கரையைக் கடக்கும்.
தமிழகப் பகுதிக்கு மழையாக வரவேண்டிய ஈரப்பதத்தை இந்த புயல் உறிஞ்சிக்கொண்டு சென்றுவிடுவதால், காற்றில் ஈரப்பதம் குறையும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் அக். 24 (இன்று) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை குறையும். இன்று (அக். 24) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 25, 26, 27-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.