Published : 24 Oct 2022 06:03 AM
Last Updated : 24 Oct 2022 06:03 AM
சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும், அவர்களுக்கு பயண செலவு, தங்குமிடம் இலவசம் என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. தமிழகத்துக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொணருவது இதன் நோக்கமாகும்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், தமிழகத்தின் 12 வெவ்வேறு இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும், சென்னை, கோவை, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகள் மூலம் பல்வேறு குழுக்களாக காசிக்கு அழைத்துச் செல்லப்படுவர். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டு திரும்பி வர 8 நாட்கள் வரை ஆகும். காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதுடன், கங்கையில் படகு சவாரியும் மேற்கொள்வர். விருந்தினர்களின் பயணச் செலவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் http://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT