

தமிழக பாஜகவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக பாஜக தேசிய தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தற்போது மத்திய கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான இணை அமைச்சராக பொறுப்பேற் றுள்ளார். பாஜகவின் விதிமுறை களின்படி ஒரே நபர் 2 பதவி களில் இருக்கக் கூடாது என்பதால் தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்படு வார் என்று கடந்த இரு மாதங்களாகவே தகவல் கசிந்த வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து தலைவர் பதவியைப் பெறுவதற்காக தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளிடம் ஓசையில்லாமல் போட்டா போட்டியும் உருவானது.
பாஜக தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள் ளதால், தேசிய அளவிலும் பாஜகவிற்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட்ட பின்னரே தமிழகத்துக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப் படுவார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தமிழக பாஜகவுக்கான தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அமித் ஷா தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி தலை மைக்கு நெருக்கமான தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தீவிர ஆலோசனைகளில் தேசிய தலைமை ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் மூத்த நிர்வாகிகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதில் பாஜக முன்னாள் தலைவர்களான எச்.ராஜா, கே.என்.லெட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளரான தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோரின் பெயர்கள் தீவிர பரிசீலனையில் இருந்து வருகின்றன.
எனவே தமிழகத்துக்கான புதிய தலைவர் யார் என்பது இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரியவரும். அதே சமயத்தில் தலைவர் பதவிக்காக பரிசீலிக்கப்பட்ட மற்ற தலைவர் களுக்கு அரசு ரீதியான பொறுப்பு களை தரவும் பாஜக திட்ட மிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.