சென்னையை மையப்படுத்தி புதிய திட்டங்களை செயல்படுத்தினால் காலநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க முடியாது: எம்.ஜி.தேவசகாயம்

சென்னையை மையப்படுத்தி புதிய திட்டங்களை செயல்படுத்தினால் காலநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க முடியாது: எம்.ஜி.தேவசகாயம்
Updated on
1 min read

சென்னை: சென்னையை மையப்படுத்தி புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால் சென்னை மாநகரில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியாது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் சமூகப் பணிகல்லூரியின் சமூக தொழில்முனைவோர் துறை சார்பில் சென்னை மாநகராட்சி தயாரித்துள்ள 'சென்னை மாநகர காலநிலை மாற்றம் குறித்த செயல்திட்டம்' தொடர்பான கருத்தரங்கம், எழும்பூரில் உள்ள கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதில் வங்கி அதிகாரிகள் சங்க முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோ நெறியாளராக இருந்து கருத்தரங்கை வழிநடத்தினார். அக்கருத்தரங்கில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமைச் செயலர் அலுவலர் ராஜ் செரூபல் கூறும்போது, "காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகர பரப்பு 29 சதவீதமும், 100 ஆண்டுகளில் 56 சதவீதமும் வெள்ளத்தில் மூழ்கும். இந்த பாதிப்பை மட்டுப்படுத்த, 2050-ம் ஆண்டுக்குள், தியாகராயநகரைப் போல நடைபாதை வணிக வளாகங்களை பல இடங்களில் அமைத்து, கார்பன் வெளியேற்றத்தை சமநிலைக்கு கொண்டுவருதல் மற்றும் நீர் சமச்சீர் நிலையைக் கொண்டு வருதல் போன்ற பணிகள் செய்யப்பட உள்ளன" என்றார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் பேசும்போது, "துறைமுக திட்டம், விமான நிலைய திட்டம், தொழிற்சாலை திட்டங்கள் போன்றவற்றை சென்னையை மையப்படுத்தியே கொண்டுவந்தால், சென்னையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே முடியாது. 1990-ம் ஆண்டு முதலே மாநகரமேம்பாட்டுத் திட்டம், முழுமைதிட்டம் எனப் பல திட்டங்கள் போடப்பட்டன. அவை எதுவும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. நமதுசொகுசு வாழ்க்கைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்ற முயற்சிக்கிறோம்; அது நடக்காது" என்றார்.

நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் உரையாற்றும்போது, "வட சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம். தென் சென்னையில் குறைவு. இந்நிலையில் மாநகரம் முழுமைக்கும் ஒரு செயல் திட்டம் கொண்டுவருவது ஏற்புடையதாக இல்லை. ஆறுகளிலிருந்து வெளியேறிய நீரால் 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. 2021-ல் அந்தந்த பகுதி சார்ந்த பிரச்சினைகளால் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பெய்த அளவு மழைதான் 2015-ல்பெய்தது. ஆனால் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதற்குக் காரணம், நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு, காலி இடங்கள் குறைந்தது. இருக்கும் இடங்களும் சிமென்ட் கான்கிரீட்டுகளாக மாற்றப்பட்டதுதான். இதை எல்லாம் கருத்தில் கொண்டு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் ஆண்டனி ஸ்டீபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாக்கியம், காலநிலை மாற்றத்துக்கான சென்னை குடிமகன் அமைப்பைச் சேர்ந்த பூர்வஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in