Published : 26 Nov 2016 03:38 PM
Last Updated : 26 Nov 2016 03:38 PM

முகநூலில் சொந்த புகைப்படத்தை பதிவிடக் கூடாது: மாணவிகளுக்கு, தென்மண்டல ஐஜி முருகன் அறிவுரை

‘முகநூல் பக்கங்களில் சொந்த புகைப்படங்களை பதிவிடுவதை மாணவிகள் தவிர்க்க வேண்டும்’ என்று, தென்மண்டல ஐஜி முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மகளிர் கல்வி மையம் சார்பில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஐஜி முருகன் பேசியதாவது:

பெரும்பாலானோர் வாட்ஸ்அப், முகநூலுக்கு அடிமையாகிவிட்டோம். மதுஅடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையங்கள் வந்துள்ளது போல், எலெக்ட்ரானிக் ஊடகங்களுக்கு அடிமையானவர்களை மீட்கும் மையங்கள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

நமக்கு எழுத்து, பேச்சு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த உரிமைகளால் அடுத்தவர் மனதை புண்படுத்தக் கூடாது. நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கருத்தை படித்தால், படத்தை பார்த்தால் யாருடைய மனமும் புண்படாது என்றால் மட்டுமே அவற்றை பகிர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தவறான தகவல்களை, புகைப்படங்களை பகிர்ந்தால் அது குற்றம். தவறான புகைப்படங்கள், தகவல்களை `லைக்’ செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகள் தங்களுக்கு மிகவும் தெரிந்தவர்களுக்கு மட்டுமின்றி, வேறு யாருக்கும் தங்கள் சொந்த புகைப்படங்களை முகநூல், வாட்ஸ்அப்-களில் பகிர வேண்டாம். அனைவருக்கும் தெரியும்படி புகைப்படங்களை பகிர்ந்தால் அது பல்வேறு குற்றச்செயல்களுக்கு காரணமாக மாறிவிடுகிறது.

முகநூல், வாட்ஸ்அப் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. அவற்றை சரியானவற்றுக்கு பயன்படுத்த வேண்டும். முகநூல், இ.மெயிலுக்கு மாற்று முகவரிகளை வைத்துக்கொள்ள கூடாது. அவ்வாறு பொய்யான ஐடிகளை வைத்திருப்பது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

முகநூல், இணையதள முகவரிகளை அவ்வப்போது மாற்ற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நமது பழைய கைபேசிகளை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும் கைபேசிகளை உடைத்துபோட்டுவிட வேண்டும்.

உங்கள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவோர் குறித்து மாணவிகள் தைரிய மாக அருகிலுள்ள போலீஸ் நிலையங் களில் புகார் தெரிவிக்கலாம். அதன்பேரில் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை வி.பிரிட்டோ, செயலாளர் அருட்தந்தை ஏ.அந்தோணிசாமி, முனைவர் எஸ்.மேரி ஜெலஸ்டின்கலா, பேராசிரியை ஜெ.ரெக்ஸி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x