

சென்னை: "ஆந்திரா காவலதுறையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டுக்கு வரும் ஆந்திரா பேருந்துகளை சிறை பிடித்து, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக சட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வுகளை முடித்து விட்டு, நேற்று மாணவர்கள் காரில் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர்.
எஸ்.ஆர்.புரம் வடமாலாப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, அங்கு வந்த ஆந்திராவை சேர்ந்த ரவுடி கும்பலும், தமிழ்நாட்டில் இருந்து வந்து எங்களிடம் பிரச்னை செய்கிறீர்களா என கூறி, மாணவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
தகவலறிந்து வந்த ஆந்திரா காவல்துறையும், என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கேரள மலைத் தோட்டங்களில் வேலைக்குச் சென்ற தேனி மாவட்டத் தமிழக பெண்கள் உட்பட 500 பேரை மலையாளிகள் சிறைப்பிடித்தபோதும் சரி, காவிரி உரிமை சிக்கலில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் சரி, ஆந்திராவில் செம்மரக்கடத்தல் விவகாரத்தில், தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டபோதும் சரி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய போதும் சரி, தமிழர்களாகிய நாங்கள் அமைதியான வழியில் அறப்போராட்டத்தை தான் கையில் எடுத்தோம்.
உரிமைகளை இழந்தாலும் ஓங்கி எழாமல், ஒதுங்கி வாழும் தமிழர்களை வலிந்து தாக்குவதையே, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் கடைபிடித்தே வருகிறது. அதன் தொடர்ச்சி தான், ஆந்திராவில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலும். உரிமைகளை இழந்து இழந்து உதைவாங்கி உதை வாங்கி அவமானப்பட்டுக் கிடக்கும் தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் அமைதியாக இருக்க மாட்டோம்.
இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம், இந்திய அரசு என சட்டப்படியான நிறுவனங்கள் எதுவும் தமிழர்களைப் பாதுகாக்காத போது திருப்பி அடித்துத்தான், தங்கள் உயிரையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்ற நிலை வந்தால், அதற்கும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம்.
எனவே, ஆந்திரா காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டுக்கு வரும் ஆந்திரா பேருந்துகளை சிறைப்பிடித்து, மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
அயல் மண்ணில் தமிழர்களை அவர்கள் தாக்கினால் நம் மண்ணில் அவர்களுக்குப் பதிலடி கொடுப்போம். எதிரி கையாளும் உத்தியை நாமும் கையில் எடுப்போம். இதுவும் தமிழர்களை பாதுகாத்தும் கொள்ளும் தற்காப்புப் போர். இதனை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.