ரூ.2 ஆயிரம் தீபாவளி பரிசு | திமுக கிளைச் செயலாளர்கள் உற்சாகம்; இளைஞர் அணியினர் ஏமாற்றம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: அதிமுக பாணியை கையிலெடுத்த திமுக கட்சித்தலைமை, முதல்முறையாக தீபாவளி பரிசாக தமிழகம் முழுவதும் கிளைச் செயலாளருக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கச் சொல்லி அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பணப் பட்டுவாடா நடந்து வருவதால் கிளைச் செயலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால், இளைஞரணி நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தீபாவளி உள்ளிட்ட இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறுவதில்லை என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருந்தபோதும், தீபாவளி கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாததது என்பதை உணர்ந்த திமுக கட்சி தலைமை தற்போது அதிமுக பாணியில் கிளைச் செயலாளருக்கு ரூ.2 ஆயிரம், ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் என பதவிக்கேற்றவாறு பரிசுத்தொகை வழங்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உரியவர்களுக்கு பணம் கிடைத்ததை உறுதிப்படுத்த அவர்களிடம் கையெழுத்து பெற்று அதனை தலைமைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. கட்சி தலைமையின் உத்தரவால் கிளைச்செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பில் உள்ளவர்கள் உற்சாகமாக உள்ளனர். ஆனால் இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு வழங்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் ஒருவர், "திமுகவில் தான் கிளைச் செயலாளருக்கு முக்கியத்துவம் அளித்து தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது பரிசுத்தொகை வழங்குவர். அதேபாணியில் திமுக கட்சித்தலைமையே தற்போது முதல் முறையாக தீபாவளிக்கு பரிசுத்தொகை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் தேடும் மாவட்ட செயலாளர்கள் தீபாவளிக்கு எங்களை வரவழைத்து பெயருடன் கூடிய கவரில், பரிசுத்தொகை, இனிப்புகள் வழங்கியது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு சுறுசுறுப்புடன் பணியாற்ற இப்போதே ஊக்கப்படுத்த தொடங்கியதாக தெரிகிறது" என்றார்.

இதுகுறித்து இளைஞரணி பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், "தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து தமிழக முதல்வராகி உள்ளார். அவர் வகித்த பதவியை அவரது மகன் உதயநிதி தற்போது வகிக்கிறார். இளைஞரணியினரும் சுறுசுறுப்பாக பணியாற்றியதால்தான் எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.

தற்போது தீபாவளி பரிசாக கிளைச் செயலாளருக்கு ரூ. 2 ஆயிரம், ஒன்றிய செயலாளருக்கும் ரூ. 2 லட்சம் பணம், ஒன்றிய அவைத்தலைவர், பொருளாளர், துணைச்செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் என பொறுப்பில் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பணம் வழங்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. வருங்காலங்களில் கட்சிக்கு அடித்தளமாக உள்ள இளைஞரணியினருக்கு தீபாவளி பரிசாக பணம் வழங்காதது ஏமாற்றமளிக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in