

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்துக்கு பயங்கரவாத அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவையில் இன்று (அக்.23) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் சிலிண்டர் வெடித்ததாக கூறுகின்றனர். அங்கு சிறிய பால்ரஸ் குண்டுகள் 2 முதல் 3 கிலோ இருந்துள்ளது. ஆணிகள் இருந்துள்ளன. சிலிண்டர் வெடித்திருந்தால் இந்த பொருட்கள் அங்கே எப்படி வரும் என்ற கேள்வி எழுகிறது.
அந்த கோயிலை கலங்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் வெடிவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறை சரியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும். இந்த சம்பவத்துக்கு பயங்கரவாத அமைப்புகள் காரணமாக இருக்கலாம். தமிழக உளவுத்துறை சரியில்லை. இந்த ஆட்சி நன்றாக இருக்க வேண்டுமெனில் உளவுத்துறையை மாற்றியமைக்க வேண்டும்.
தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கோவை மாநகரில் கலவரத்தை உருவாக்க முயற்சிகள் நடந்துள்ளன. திமுக அமைச்சர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆன்மிகத்துக்கு விரோதமாக அவர்கள் பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் மதமாற்றமும், சட்டவிரோத தேவாலயங்களும் உருவாகி வருகிறது. பயங்கரவாதிகள் வளர்ந்து வருகின்றனர்". இவ்வாறு அவர் கூறினார்.