சமூகவிரோதிகளிடமிருந்து மக்களை காக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது: அண்ணாமலை 

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை தமிழக பாஜக வரவேற்கிறது.

தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கோவை டவுன்ஹால் அருகேயுள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்று (23-ம் தேதி) அதிகாலை 4.10 மணியளவில் ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்த போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உக்கடம் போலீஸாருக்கும், கோவை தெற்கு தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறிதுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் இரண்டாக உடைந்து எரிந்து உருக்குலைந்தது. காரை ஓட்டி வந்த நபர் அருகே தீயில் கருகி உயிரிழந்து கிடந்தார். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்து நடந்த பகுதியில் இருந்து பால்ரஸ் குண்டு, ஆணிகள், சிலிண்டர்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதியில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் வெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நபர் யார், விபத்து ஏற்பட்டது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரித்து வருகின்றனர். இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in