

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 1,586 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 1,586 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி முழு உடல் பரிசோதனை மையத்தில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் அனலைசர் கருவி, மருத்துவமனை வளாகத்தில் ரூ.13.15 லட்சம் செலவில் 3 நிழற்குடைகள், சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் ரூ.4.5 கோடி செலவில் நவீன மருத்துவ உபகரணங்கள், ரூ.76 லட்சம் செலவில் நாற்பரிமாண எக்கோ கருவி மற்றும் ரூ.51 லட்சம் செலவில் இண்டிராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் கருவி ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன்தேரணிராஜன், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை தலைவர் கோவிந்தராஜன், சிறுநீரக துறைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965-ல் சிறுநீரக அறுவை சிகிச்சை துறை பட்டமேற்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 3,600 வெளி நோயாளிகள், 300 உள்நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 220 அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநோயாளிகள் பிரிவில் அல்ட்ரா ஸ்கேன், சிறுநீர் தாரைவிரிவு படுத்துதல், யூரோபுளோமெட்ரி, யூரோடைனமிக் பரிசோதனை, சிஸ்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 1986-ல் இந்தியாவிலேயே இரண்டாவதாக, சிறுநீரகற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் கல்லூரியாக சென்னை மருத்துவக் கல்லூரி விளங்குகிறது.
1,286 சிறுநீரகங்கள் உறவினர்களிடமிருந்தும், 300 சிறுநீரகங்கள் மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்தும் பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இங்கு செய்யப்பட்டுள்ளது. 2008-ல்அதிர்வு அலை முறையில் சிறுநீரகக் கல் உடைக்கும் கருவி தமிழகத்தில் முதல்முறையாக இங்கு நிறுவப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் அதிர்வு அலை முறையில் சிறுநீரகக் கற்கள் உடைக்கப்பட்டு 14,882 பயனாளிகளுக்கு 17.37 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் செலவில் 3 பேருக்கு ரத்த குழாய் வீக்கம், அவசர நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை ரத்த குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.