

கோவை: "தடய அறிவியல் துறையைச் சேர்ந்த முழு குழுவினரும், விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது" என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
கோவையில் கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சம்பவம் நடந்த இடத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் " கோவையில் இன்று காலை நடந்த சம்பவம் குறித்த புலன்விசாரணை கோவை மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.
தடய அறிவியல் துறையைச் சேர்ந்த முழு குழுவினரும், விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
கோவையில் இருக்கக்கூடிய வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கமாண்டோ பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தில் இங்கு வந்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. சிலிண்டர் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காரின் உரிமையாளர்கள் குறித்தும், இறந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில்தான் மற்ற விவரங்களை கூற முடியும்.
தற்போதைக்கு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க என்ஐஏ உதவி தேவைப்படவில்லை. புலன்விசாரணையில் அதுபோன்று ஏதாவது தென்பட்டால்தான் அதுகுறித்து சொல்லப்படும்" என்று அவர் கூறினார்.