கோவையில் கார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி தாமரைக் கண்ணன் | படம்: ஜெ.மனோகரன்.
கோவையில் கார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி தாமரைக் கண்ணன் | படம்: ஜெ.மனோகரன்.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்தது எப்படி? – ஏடிஜிபி விளக்கம் 

Published on

கோவை: கோவை உக்கடத்த்தில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த கார் விபத்து நிகழ்ந்துள்ளதால், காவல்துறை கவனமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் கூறியுள்ளார்.

கோவையில் கார் வெடித்து விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " இந்த சாலையில் வந்த ஒரு மாருதி 800 காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது. அந்த வாகனத்தை ஓட்டிவந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

விபத்தில் பலியானவரின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். விபத்து நடந்த பகுதிக்கு அருகாமையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. கோயிலின் முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், கூடுதல் கவனத்துடன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தடய அறிவியல் துறையில் இருந்து உயரதிகாரிகள் எல்லாம் வந்துள்ளனர். அவர்களும், விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை எல்லாம் சேகரித்து விசாரித்து வருகிறோம். காவல்துறை இந்த விவகாரத்தில் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது. கிட்டத்தட்ட 6 குழுவினர், விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவு இன்று மாலையில் அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழக காவல்துறை டிஜிபி சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் இன்று அதிகாலை வந்த கார், வேகத்தடை ஒன்றில் ஏறி இறங்கியது. அப்போது திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது.

இந்த விபத்தை பார்த்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்குள் கார் தீயில் கருகி, காரில் இருந்தவர் பலியானார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பலியானவரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in