Published : 23 Oct 2022 11:29 AM
Last Updated : 23 Oct 2022 11:29 AM

தீபாவளி திருநாள்: பொதுமக்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

கோப்புப்படம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் இபிஎஸ்: "தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும்பண்டிகைதானே தீபாவளி. தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து,அதிமுகவின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட மறைந்த முதல்வர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: " தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சமூகநீதிக்கும் சறுக்கல்கள் ஏற்பட்டன. மக்கள் முன்னேறவும், சமத்துவத்தை உண்டாக்கவும் சமூகநீதி மிகவும் அவசியமாகும். சமூகநீதியின் ஒளியை சதிகார கூட்டத்தின் கைகள் தடுத்து நின்றாலும் மறைக்க முடியாது. சதிகளால் சறுக்கலுக்கு உள்ளான சமூகநீதி, கிரகணத்தை விலக்கி ஒளிவிட ஆயத்தமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி: " அறியாமை எனும் இருளைப் போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் இந்த தீபாவளி திருநாள் கொண்டு வரட்டும். அனைவரும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்த நன்னாள் வழங்கட்டும்.

கரோனா, பொருளாதாரச் சீரழிவு, வேலையிழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு என பல மக்கள் விரோத நடவடிக்கைகளினால் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கும் முடிவு கட்டும் நன்னாளாக இந்த தீபாவளி அமையட்டும்.

தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்: " இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்நன்னாளில் தனி மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: " நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீபஒளித் திருநாள் இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும்.

மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "தீமைகள் எல்லாம் விலகி, நன்மைகள் பெரும் வெளிச்சமாக பரவட்டும், ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்கட்டும். உள்ளும் புறமும் உயர்ந்த சிந்தனைகளோடு இருளை அகற்றி, அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி திருநாள் வழிகாட்டட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: " தேசமெங்கும் பட்டாசுகள் மூலம் மக்களின் வாழ்வில் மத்தாப்பு போன்ற புன்னகை மலர செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் GST வரி, பருவமழை, மூலப்பொருட்களின் விலையேற்றம் என விலைவாசி உயர்வால் நலிந்து வரும் பட்டாசு விற்பனையை கண்டு வேதனையில் உள்ளனர். பட்டாசு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதை தடுத்திடவும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவ முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஒருநாள் மகிழ்ச்சி என்பது ஆண்டு முழுதும் நிறைந்திருக்க வேண்டும் என்றவகையில், உறவுகளோடும், நட்புகளோடும் தீபாவளித் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர்: "ஜாதி, மத, மொழி, மாநில எல்லைகளை தாண்டி பொதுவாக அனைத்து தரப்பு மக்களாலும் ஒளித் திருநாளாய் நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமை, வறுமை, தீமை மற்றும் வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

வி.கே.சசிகலா: இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம். இந்த தீப திருநாளில் அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் துன்பம் விலகி, இன்ப ஒளி வீசட்டும், வாழ்வில் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x