Published : 23 Oct 2022 12:16 PM
Last Updated : 23 Oct 2022 12:16 PM
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் மீது கொலை முயற்சிஉட்பட 4 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி கிராமத்தை சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த 20-ம் தேதி அதிகாலை, நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 30 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் பாக் ஜலசந்தி கடல் பகுதியான இந்திய, இலங்கை சர்வதேச கடல் பகுதி வழியாக கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் ஐஎன்எஸ் பங்காரம் என்ற இந்திய கடற்படை கப்பலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் மீனவர்களின் விசைப்படகை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால், மீனவர்கள் படகை நிறுத்தாததால், படகின் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, கடற்படைக்குச் சொந்தமான விமானப்படை தளத்தில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் மூலம் வீரவேல் மீட்கப்பட்டு, மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, மற்ற 9 மீனவர்கள் மற்றும் விசைப்படகை, நாகைதுறைமுகத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் கடற்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒப்படைத்தனர். அதன்பின் 9 பேரும், நாகை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ‘‘இந்திய கடற்படை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதுடன், எங்களை கப்பலில் வைத்து கைகளை கட்டி இரும்புகம்பியால் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக தாக்கினர். மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடற்படையினரே எங்களைத் தாக்கி துன்புறுத்தியது வேதனை அளிக்கிறது’’ என்றனர்.
நாகை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் நேற்று சந்தித்து விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மீனவர் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில், இந்திய கடற்படையினர் மீது, 324 (ஆயுதங்களால் கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 326 (மிக அதிக காயம் உண்டாக்குதல்), 307 (கொலை முயற்சி), 27(1) ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT