

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்கான வளமான திட்டங்கள் இல்லாததே வெளி மாநிலத்தில் தருமபுரி பெண் நரபலியாகக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகிலுள்ள எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா. குடும்ப வறுமை காரணமாக கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த பத்மா கடந்த ஜூன் மாதம், பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு கும்பலால் நரபலியாக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பின்மை காரணமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு பிழைப்புதேடி செல்வோர் இதுபோன்ற பல்வேறு அவலங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த கல்வியாளர் பிரணவகுமார் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டங்கள் உள்ளன. இவற்றில் வசிக்கும் பெரும்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால், மாவட்டத்தில் ஒருசில பகுதிகளைத் தவிர இதர விவசாய கிராமங்கள் மானாவாரி நிலங்களை உள்ளடக்கியதாகவே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒருவிதமாக மழைப்பொழிவு இருப்பதால் மானாவாரி நிலங்களை வாழ்வின் நிரந்தர வாழ்வாதாரமாகக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதனாலேயே தருமபுரி மாவட்ட தொழிலாளர்கள் பலரும் திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை, ஓசூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பிழைப்பு தேடி செல்கின்றனர். குறிப்பாக, பென்னாகரம் வட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களும், சித்தேரி போன்ற மலைக்கிராம மக்களும் வேலைதேடி அதிக அளவில் வெளியில் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் சிலர் தங்கள் அறியாமையால் அவ்வப்போது சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் பெரும் ஆபத்துகளிலும் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் தான் எர்ரப்பட்டியைச் சேர்ந்த பத்மா என்பவர்கேரளாவில் நரபலியாக்கப்பட்டிருக்கிறார்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண, மானாவாரி நிலப்பரப்பை பாசன வசதிபெறும் நிலங்களாக மாற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள், படித்தவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் விரைந்து அரசு செயல்படுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 2 தலைமுறையினர் இதே நிலையில் தான் அல்லல்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை அரசு சமூகக்கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். தருமபுரி மாவட்ட மக்கள்மீது கனிவு கொண்டு வேலை வாய்ப்புக்கான திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார். அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் விரைந்து அரசு செயல்படுத்த வேண்டும்.