

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையங்களின் பரிந்துரைகளை விசாரிக்க தனித்தனியே இரு நீதிபதிகள் கொண்டஅமர்வை அமைத்து விசாரிக்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையில் 8 பேரை விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கையில் ஆட்சியர், போலீஸார் உள்ளிட்ட 21 பேர் மீதுநடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.
சட்டப்பேரவையில் அறிக்கை வெளியிடப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில், அதுதொடர்பாக அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி கருத்து தெரிவிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மருத்துவர்களுடன் சி.விஜயபாஸ்கர் கலந்துபேசி, ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அப்போலோ மருத்துவமனைக்கும் சீல்வைக்க வேண்டும்.
இந்த இரு ஆணைய பரிந்துரைகளை விசாரிக்க 2 நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதை முதல்வர் செய்யாவிட்டால், ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.