Published : 23 Oct 2022 04:45 AM
Last Updated : 23 Oct 2022 04:45 AM
திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மும்பைக்கு முதன் முறையாக நேரடி வாராந்திர ரயில் அக்.27-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்- விழுப்புரம் இடையேயான ரயில் பாதை அகல பாதையாக 2011-ம் ஆண்டு மாற்றப்பட்ட பிறகு கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
மேலும், ராகவேந்திரரின் பரம குருவான விஜயேந்திர சுவாமிகளின் மடம் உள்ள கும்பகோணம் மற்றும் தலைமை மடம் உள்ள ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் நேரடி ரயில் வசதி வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அக்.27-ம் தேதி முதல் நவ.27-ம் தேதி வரை அகமதாபாத்- திருச்சி இடையே ஒரு வாராந்திர குளிர்கால சிறப்பு ரயிலை இயக்குவது என அகில இந்திய ரயில்வே கால அட்டவணை கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அந்த வாராந்திர ரயிலை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, கல்யாண்(மும்பை), புனே, மந்த்ராலயம்(வெள்ளிக்கிழமை காலை 5.05), ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், கும்பகோணம்(இரவு 11.30), பாபநாசம்(இரவு 11.47), தஞ்சாவூர்(நள்ளிரவு 1.35) வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர் (காலை 7), பாபநாசம்(காலை 7.25) கும்பகோணம்(காலை 7.50), சென்னை எழும்பூர்(மதியம் 2.40) வழியாகச் சென்று, அதே வழித்தடத்தில் திங்கட்கிழமை இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.
தங்களின் நீண்டநாள் கோரிக்கையான மும்பைக்கு நேரடி ரயில் இயக்கப்பட உள்ளதால், தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த ரயில் சூரத் வழியாக அகமதாபாத் வரை செல்வதால் இப்பகுதியிலுள்ள குஜராத் மாநில மக்களும், ஜவுளி வர்த்தகர்களும் பெரும் பயனடைவார்கள்.
இதுதவிர, மந்த்ராலயம், மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள ஜோதிர்லிங்க தலங்களுக்கும், கேவடியாவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கும் இந்த ரயிலில் சுற்றுலா செல்லலாம்.
எனவே, பல முக்கிய ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கு பக்தி விரைவுவண்டி என பெயரிட்டு நிரந்தரமாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் ஏ.கிரி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT