ரூ.84.27 கோடி மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன் கைது: திருப்பூர் தோழி வீட்டில் போலீஸார் சுற்றிவளைத்தனர்

ரூ.84.27 கோடி மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன் கைது: திருப்பூர் தோழி வீட்டில் போலீஸார் சுற்றிவளைத்தனர்
Updated on
2 min read

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.84.27 கோடி மோசடி செய்த ‘வேந்தர் மூவிஸ்’ மதன், 176 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். திருப்பூரில் பெண் தோழி வீட்டின் ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், யாருக்கும் அவர் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. எனவே, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த மே 29-ம் தேதி ‘நான் காசிக்குச் சென்று கங்கையில் ஜீவ சமாதியாகப் போகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலைமறைவானார். இதனால், அவரிடம் மருத்துவ சீட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். “மோசடி செய்த மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும்’’ என கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மாயமான மதனை கண்டுபிடித்து தரும்படி விருகம்பாக்கம் காவல் நிலையத் தில் அவரது தாயார் தங்கம், கடந்த மே 31-ம் தேதி புகார் அளித்தார். ஜூன் 1-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதனை கண்டுபிடித்து தரும்படி அவரது 2 மனைவிகளும் தனித்தனியாக காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்து இருந்தனர். மதனின் தாயார், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மதனைக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டது. மதன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரை ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக் கப்பட்டது.

இதற்கிடையே, பண மோசடி யில் மதனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி இந்திய ஜனநாயக கட்சியின் மருத்துவர் அணிச் செயலாளர் பார்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டத் தலைவர் கே.சண்முகம், திண்டுக் கல் மாவட்டத் தலைவர் எம்.பாபு என்ற சீனிவாச பாபு, ஏஜென்ட் விஜய் பாண்டி, மதனின் அலுவலக மேலாளர் சுதிர் என்ற வெங்கட சுதிர், கணக்காளர் குணா என்ற குணசேகரன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டார்.

மாயமான மதனைக் கண்டுபிடிக்க தமிழகம் மட்டும் அல்லாமல் வாரணாசி, ரிஷிகேஷ் என வட மாநிலங்களிலும் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில், மதன் திருப்பூர் பூண்டி பாலம் பகுதியில் உள்ள பெண் தோழி ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்த தனிப்படையினர் அங்கு ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத் தில் வைத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு மதனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மதனை கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேரில் அழைத்து பாராட்டினார்.

விரைவில் மதனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in