சென்னையில் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க தனி வாகனங்கள்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

பட்டாசுக் கழிவுகள் | கோப்பு படம்
பட்டாசுக் கழிவுகள் | கோப்பு படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க மண்டலம் வாரியாக 2 வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது, சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகரின் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை அலுவலர்கள், உர்பேசர் சுமீத் நிறுவன அலுவலர்கள் மற்றும் சென்னை என்விரோ நிறுவன அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று (அக்.22) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு கனரக வாகனங்களை இப்பணிகளுக்காக ஒதுக்கவும் என்றும் ஆணையர் அறிவுறுத்தினார்.

மேலும், தினந்தோறும் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், பின்னர் இந்தக் கழிவுகள் முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in