Published : 18 Nov 2016 10:09 AM
Last Updated : 18 Nov 2016 10:09 AM

ரூ.500, 1000 செல்லாது அறிவிப்புக்கு எதிர்ப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

அண்ணா மேம்பாலம் அருகே பரபரப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெறக் கோரி, அண்ணா மேம்பாலம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதாக மிரட்டினார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இளைஞர் ஒருவர் ஏறி நின்று உரக்க கத்தி பேசினார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தேனாம்பேட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த இளைஞரை கீழே இறங்கி வரும்படி போலீஸார் கூறினர்.

ஆனால் அவர், ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை திரும்ப பெற வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதன் பின்னரே நான் கீழே இறங்கி வருவேன். இல்லையென்றால் இங்கிருந்து குதித்துவிடுவேன்’ என்று மிரட்டினார். அதைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் அந்த இளைஞரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கிக் கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவரது பெயர் ரவிச்சந்திரன் என்பது மட்டும் தெரியவந்தது. அவரை தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவிச்சந்திரனின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரவிச்சந்திரனை வேடிக்கை பார்க்க அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போலீஸார் வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x