

சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட செய்தித் தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சியில் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2 தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வானார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துகளுக்கு எதிர் கருத்துகள் வந்ததால், அப்பதிவுகளை நீக்கிவிட்டார்.
இந்நிலையில், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக, திமுக பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், கே.எஸ்.ராதாகிருஷ்ணனே தனது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, கருத்து கூற மறுத்துவிட்டார்.
ஆனால், சமூக ஊடகங்களில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள வரிகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘நண்பர்களே, நான் பிரியப்போகும் இந்த நேரத்தில் என்னைவாழ்த்தி அனுப்புங்கள். வானத்தின்வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது. எனது பாதையும் அழகைப் பொழிகிறது. நான் என்னுடன் என்னகொண்டு போகிறேன் என்று கேட்காதீர்கள். வெறுங்கையுடன், ஆர்வ இதயத்துடன் என் யாத்திரை ஆரம்பமாகிறது. நான் எனது திருமணமாலையை அணிந்து கொள்கிறேன்.எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று.
பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும் என் மனதில் எவ்விதப் பயமும் இல்லை. எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம் எட்டிப்பார்க்கும். அரசனின் அரண்மனையில் இருந்து அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும். நான்இந்த வாழ்க்கையை விரும்பும்காரணத்தினாலேயே மரணத்தை நேசிக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.