

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லையானது சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ அளவுக்கு தற்போது உள்ளது. இந்நிலையில், கடந்த2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
அதில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள், அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டு மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
கடந்த அக்.11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் அக்.14-ம் தேதி விரிவாக்கத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தார். குறிப்பாக, 8,878 சதுர கிமீக்கு பதில், 5,904சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, அரக்கோணம் வரையில், 1,225 கிராமங்கள் புதிதாக சிஎம்டிஏ வரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 1,189 சதுர கிமீ ஆக இருந்த சிஎம்டிஏ எல்லை, தற்போது 5 மடங்கு அதிகரித்துள்ளது.