

மக்களின் கோபத்தில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 128-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து ‘நேரு கண்ட ஜனநாயக சோஷலிசம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. குமரிஅனந்தன், கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பின்னர் நிருபர்களிடம் திருநாவுக் கரசர் கூறியதாவது:
500, 1000 நோட்டுகள் செல் லாது என ஒரு சர்வாதிகாரி போல பிரதமர் நரேந்திர மோடி அறிவித் துள்ளார். ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள் எதையும் மத்திய அரசு செய்யவில்லை. 500, 1000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. அதுவும் ஏடிஎம் மையங்களில் கிடைப்பதில்லை. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை.
இதனால் அன்றாடச் செலவுகளுக் குக்கூட பணம் கிடைக்காமல் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எங்கு சென்றாலும் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். கோபத்தில் இருக்கும் மக்களை ஏமாற்ற மோடி நீலிக் கண்ணீர் வடிக் கிறார். ஆனால், மக்களின் கோபத்தில் இருந்து அவர் தப்ப முடியாது.
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அவசரக் கோலத்தில் நடவடிக்கை எடுப்பது சரியல்ல. கிராமங்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, கூட்டுறவு வங்கிகள் மூலம் பணத்தை மாற்றிக் கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது மத்திய அரசு திட்டம் என தமிழக அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது. முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து அவர் வெளி யிடும் அறிக்கைகளில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் இடம்பெறும் என நம்புகிறேன். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னதாக கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.