ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறை அமல்

ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறை அமல்
Updated on
2 min read

ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

நம் நாட்டில் சென்னை, மும்பை, ஐதராபாத், கான்பூர், கரக்பூர், டெல்லி உட்பட 22 இடங்களில் ஐஐடி எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. ஐஐடி-யில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்காக ஜெஇஇ என அழைக்கப்படும் கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஐஐடி-யில் படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் பெரிய நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. இதனால், ஐஐடி-யில் சேர மாணவ-மாணவிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜெஇஇ நுழைவுத்தேர்வு 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஇஇ நுழைவுத்தேர்வு, மெயின் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது. முதல்கட்ட தேர்வான மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜெஇஇ மெயின் தேர்வே போதுமானது. ஆனால், ஐஐடி-யில் சேர விரும்பும் மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வையும் எழுத வேண்டும்.

அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் ஐஐடி-க்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுவரையில், ஜெஇஇ மெயின் தேர்வு மெரிட் பட்டியலுக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுக்கு 60 சதவீதமும், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு (இயற்பியல், வேதியியல், கணிதம்) 40 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுவந்தது. இந்த மெரிட் பட்டியலில் 2 லட்சத்துக்குள் இருப்பவர்கள் மட்டுமே அட்வான்ஸ்டு தேர்வெழுதும் தகுதியை பெற்றனர். அட்வான்ஸ்டு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் ஐஐடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 2017-ம் ஆண்டு முதல் ஐஐடி மாணவர் சேர்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, ஜெஇஇ மெயின் தேர்வு மெரிட் பட்டியலுக்கு பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் தரப்படாது. 100 சதவீத வெயிட்டேஜ் மெயின் தேர்வு மதிப்பெண்ணுக்கே கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓசி, ஓபிசி வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 65 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஐஐடி ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 2017 ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மெயின் தேர்வு மெரிட் பட்டியலுக்கு பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்படாது. அதேநேரத்தில் பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் என்றால் 65 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

அடுத்ததாக, ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக் கும் மாணவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களோடு ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் சரிதானா? என்ற விவரம் உடனடியாக ஆன்லைனில் சரிபார்க்கப்படும். ஆதார் எண் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விவரங்களும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடும் விவரங்களும் ஒன்றுபோல் இல்லா விட்டால் விண்ணப்பிக்க இய லாது. எனவே, பெயர், பிறந்த தேதி விவரங்கள் ஒன்றுபோல் இல்லாவிட்டால் ஆதார் அட்டை யிலோ அல்லது பள்ளி சான்றிதழ் ஆவணத்திலோ மாணவர்கள் உரிய திருத்தங்களைச் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in