Published : 22 Oct 2022 06:06 AM
Last Updated : 22 Oct 2022 06:06 AM

தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க 4 கண்காணிப்பு கோபுரங்கள், 2 சிசிடிவி வாகனங்கள்: தூத்துக்குடியில் எஸ்பி தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி: தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதிகொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரில் புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடந்த சிலநாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டத்தில் குற்றச் செயல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான தென்பாகம் காவல் நிலையம் முன்புறம், ஜின் பேக்டரி சாலை சந்திப்பு, கண்ணா சில்க் அருகே மற்றும் டபிள்யூஜிசி சாலை, அழகர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நான்கு புறமும் 360 டிகிரியில் சுழன்று கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலம் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம்விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட 2 கண்காணிப்பு வாகனங்களையும் எஸ்பி எல்.பாலாஜி சரவணன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது எஸ்பி பேசியதாவது: தூத்துக்குடி மாநகரத்தில் பொதுமக்களின் நலன் கருதி குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு 2 வாகனங்களில் 360 டிகிரியில் நான்கு திசைகளிலும் கண்காணிக்கும் அளவில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த ரோந்து வாகனத்தில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். இந்த வாகனம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

இதன் மூலம் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டுசட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தூத்துக்குடி மாநகரின் 4 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் செயின் பறிப்பு, உடமைகள் திருடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க இந்த கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு செல்லும்போது தங்களது உடமைகளில் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 3 நாட்களுக்கு தூத்துக்குடி நகரத்தில் கூடுதலாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர் செய்யப்படும். பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் வீட்டில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி சந்தீஸ், தூத்துக்குடி நகர டிஎஸ்பி சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x