அதிமுக, திமுகவுக்கு மாற்று பாஜக என்பதை இடைத்தேர்தலில் நிரூபிப்போம்: தமிழிசை

அதிமுக, திமுகவுக்கு மாற்று பாஜக என்பதை இடைத்தேர்தலில் நிரூபிப்போம்: தமிழிசை
Updated on
1 min read

அதிமுக, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்பதை 3 தொகுதி தேர்தலில் நிரூபிப்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு சென்னை பாஜக தலைமை அலுலவலகத்தில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கன்னியாகுமரி, திருத்தணி, செங்கோட்டை போன்ற பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்ட காமராஜர், ம.பொ.சி., தாணுலிங்க நாடார், நேசமணி போன்ற தலைவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும் தேசிய நீரோட்டத்தோடு கலந்தால்தான் மாநிலங்கள் பயனடைய முடியும். இதனை தமிழக அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அங்கு பண பலம் , அதிகார பலத்தை எதிர்த்து நம்பிக்கையிடன் களமிறங்கியுள்ளோம். அதிமுக, திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை இந்த தேர்தலில் நிரூபிப்போம். சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம்.

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக தமிழக கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சாரம் செய்கின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை திறந்துவிடாக கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் தமிழக கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. சட்டத்துக்குட்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று தமிழிசை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in