Published : 22 Oct 2022 06:00 AM
Last Updated : 22 Oct 2022 06:00 AM

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வந்தது எப்படி? - ஒரு பைசாவுக்கு நடந்த துப்பாக்கி சூடு: அமைச்சர் துரைமுருகனின் நினைவலைகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் திறன் கூட்டப்பட்ட புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசும் அமைச்சர் துரைமுருகன். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு பைசா கூட்டியதற்கே துப்பாக்கிச் சூடுவரை சென்ற நிலையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்ட சம்பவத்தின் பழைய நினைவுகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் திறன் கூட்டப்பட்ட புதிய மின்மாற்றி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் வரவேற்றார். தலைமை பொறியாளர் மொழியரசி திட்ட விளக்கவுரையாற்றினார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘நான் மின்சார துறையின் அமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினேன். அதை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சி எடுத்தார். அப்போது சட்டப்பேரவையில் நான் ஆக்ரோஷமாக பேசிய பிறகு அந்த திட்டத்தை கைவிட்டதாக சொன்னார்கள். எனது பேச்சைப் பார்த்து ‘இவ்வளவு ஆக்ரோஷமாக, வசனத்தை உச்சரித்தீர்கள்’ என ஜெயலலிதா என்னிடம் கேட்டார். அதற்கு நான் எனது வேதனையை தெரிவித்ததாக கூறினேன்.

கோடிக்கணக்கான விவசாயிகள் இன்று விவசாயம் செய்வதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்ற நிலையில் நான் மின்சார துறை அமைச்சராக இருந்தபோது விவசாயிகளின் மின்சாரத்துக்கு என்ன செய்யலாம் என்று கருணாநிதி என்னிடம் கேட்டார். நான் 12 பைசாவுக்கு இருக்கும் யூனிட் மின்சாரத்தை 13 பைசாவாக உயர்த்தலாம் என்று முடிவெடுத்து சொன்னோம். இதற்கு விவசாய சங்க தலைவர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி துப்பாக்கிச்சூடு கூட நடந்தது. நான் தலைவரிடம் சென்று அந்த ஒரு பைசாவை உயர்த்தாமல் நிறுத்திவிட்டால் என்ன என்றேன். அதற்கு அவர் இனிமேல் ஒரு பைசாவும் விவசாயி கட்டத் தேவையில்லை என்று தீர்மானத்தை கொண்டுவா என்றார்.

என்னுடைய செயலாளரிடம் கூறி 10 நிமிடத்தில் கையெழுத்திட கூப்பிட்டேன். கோப்பு தயாரானபோது நான் கண் கலங்கி அழுதுவிட்டேன். அதைப்பார்த்த எனது செயலாளர் என்னவென்று கேட்டார். எங்களுடைய நிலத்தில் 3 பம்புசெட் இருக்கும். மின்சார பில் வரும்போதெல்லாம் எனது அம்மாவின் கம்மல், மூக்குத்தியும் அடகுக்கு போகும். கரன்ட் பில் கட்டியே எனது அம்மா நகை எதுவும் இல்லாமல் கடைசி காலத்தில் இறந்தார். அவருக்கு பிறந்த நான் விவசாயி மின்சார பில் கட்டத் தேவையில்லை என்று உத்தரவு போட்டேன் என்பதை நினைத்து கையெழுத்திட்டேன்.

5 ஆண்டு காலம் மின்சார துறையின் அமைச்சராக இருந்தேன். பெரிய தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கும்போது விவசாயிக்கு ஏன் கொடுக்க கூடாது என்று தலைவர் கேட்டார். அதன் விளைவுதான் இங்கு உட்கார்ந்திருக்கும் அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.

எனது தொகுதியில் முக்கிய மான 10 வேலைகளில் மேல் பாடியில் மேம்பாலம், சிப்காட் தொழிற்சாலை, வள்ளிமலையில் இழுவை ரயில் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளேன். மேல்பாடி ஈஸ்வரன் கோயில் ராஜராஜ சோழன் கட்டியது. அவரது பெரியப்பா அரிஞ்சய சோழன் மேல்பாடி போர்க்களத்தில் மாண்டுவிட்டார். அதற்கு ஒரு பள்ளிப்படை கோயிலையும் கட்டினார். பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வந்தியத்தேவன் திருவலத்தை சேர்ந்தவர். நம்முடைய ஊரின் பெருமை பலருக்கு தெரியவில்லை. சமண முனிவர்கள் பலர் வள்ளிமலையில் தங்கியிருந்தனர். நன்னூல் எழுதிய ஜெகத்முனிவர் வள்ளிமலையில் இருந்துதான் எழுதினார். காட்பாடி தொகுதியின் வளர்ச்சிக்காக இனி மாதத்துக்கு ஒரு அமைச்சரை இந்த தொகுதிக்கு அழைத்து வருவேன்’’ என்றார். கோடிக்கணக்கான விவசாயிகள் இன்று விவசாயம் செய்வதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x