Published : 22 Oct 2022 06:02 AM
Last Updated : 22 Oct 2022 06:02 AM
திருவண்ணாமலைள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச ரதங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 24-ம் தேதி தொடங்கவுள்ளது. தங்கக்கொடி மரத்தில் 27-ம் தேதி கொடி யேற்றப்படவுள்ளது. டிச.3-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். டிச.6-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. செப்.30-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, அண்ணா மலையார் கோயில் முன்பு தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மகா தேரோட்டம் நடைபெறாததால், பஞ்ச ரதங்களை முழுமையாக சீரமைத்து, அதன் உறுதி தன்மையை இறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உண்ணா முலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் அம்மன் திருத்தேர்களை சீரமைக்க, மூடி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதேபோல், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் திருத்தேர்களை சீரமைக்க மூடி வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. பஞ்ச ரதங்களில் உள்ள சிற்பங்கள், அச்சாணிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் மற்றும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்கவும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி நிறைவடைந்தாலும் தீபத் திருவிழா வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT