Published : 21 Oct 2022 03:39 PM
Last Updated : 21 Oct 2022 03:39 PM

'தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தியது வருத்தத்திற்குரியது' - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப் படம்

மதுரை: ”இந்திய கடற்படையே தமிழக மீனவர்களின் மீது நடத்தி இருக்கும் தாக்குதல் மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது” என மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் கடலில் தங்கி மீன் பிடிப்பிற்காக ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் கோடியக்கரை - ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காரைக்காலில் இருந்து சென்ற மீன்பிடி படகின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் படகில் இருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் (32) காயமடைந்தார்.

தகவலறிந்த இந்திய கடற்படையினர் உடனடியாக உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து உச்சிப்புளி கடற்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேரடியாக நடுக் கடலுக்கு சென்று படுகாயமடைந்த மீனவரை மீட்டு ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமுக்கு அழைத்துவந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் கடற்படை முகாமில் இருந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அண்ணாபேருந்து நிலைய பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆம்புலன்ஸ் மூலமாக மீனவர் வீரவேல் அழைத்து வரப்பட்டார்.

தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் மீனவர் வீரவேல் உள்ளார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை எம்பி வெங்கடேசன், மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் வீரவேல் தற்பொழுது நலமுடன் உள்ளார். அவளுக்கான சிகிச்சை மருத்துவமனையில் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்திய கடற்படை தூப்பாக்கிச் சூட்டில் பெல்லட் மீனவர் மீது பட்டத்தில் 5 இடங்களில் காயம் உள்ளது. இந்திய கடற்படையே தமிழக மீனவர்களின் மீது நடத்தி இருக்கும் தாக்குதல் மிகப்பெரிய வருத்ததிற்குரிய விஷயமாக உள்ளது. தமிழக முதல்வரின் வாயிலாக இந்தியக் கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும். நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்படும். விசாரணை ஆணையம் அமைப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார்." என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x