

சென்னை: சென்னை அண்ணா சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.21) காலை தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் இருந்த அவரைக் கண்ட முதல்வர் உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று, காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலனை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.