Published : 21 Oct 2022 04:25 AM
Last Updated : 21 Oct 2022 04:25 AM

விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தி அரசாணை - ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் வகையில் அபராதத்தை அதிகரிக்கலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதையொட்டி, திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் (2019) சில அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரையை போக்குவரத்துத் துறை ஆணையர், தமிழக அரசுக்கு அனுப்பிஉள்ளார். மின்னணு முறையில், அந்தந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்கும் வசதியும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை கவனமாகப் பரீசிலித்த தமிழக அரசு, போக்குவரத்து ஆணையரின் பரிந்துரையை ஏற்று, அபராதத்தை உயர்த்தி, அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ அல்லது காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றாலோ ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் முதல் முறை ரூ.5,000, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, 46 சட்டப் பிரிவுகளின் கீழ், விதிகளை மீறுவோருக்கான அபராதம் உயர்த்தப்படுகிறது. இவ் வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, "சாலை விதிகளை மீறு வோருக்கான அபராதத் தொகை உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கும் மின்னணுக் கருவிகளில், அது தொடர்பான மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது.

எனவே, வரும் 28-ம் தேதி முதல் புதிய அபராதத் தொகை வசூலிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இனி, மதுபோதையில் வாகனம் (கார் மற்றும் இருசக்கர வாகனம்) ஓட்டுவது தெரிந்தும், வாகனம் ஓட்டுபவருக்கு துணைபோகும் வகையில், அவருடன் பயணிப்பவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதாவது, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோர் மற்றும் காரில் ஓட்டுநருடன் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டி உயிர் இழப்பை ஏற்படுத்தினால், கொலை வழக்குக்கு நிகரானப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிமீறல்கள் தொடர்பாக போக்குவரத்து போலீஸார் அபராதம் வசூலிக்காமல் லஞ்சம் பெற்றால், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறல்களில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார் குறித்து புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உயர்த்தப்பட்ட அபராதம் எவ்வளவு?

தமிழக அரசின் புதிய அரசாணையின்படி விதிக்கப்படும் அபராதம் குறித்த விவரங்கள் வருமாறு:

> பதிவுச் சான்றிதழைப் புதுப்பிக்கத் தவறுவோர், சிக்னலை மீறுவோர், ஆபத்தான நிலையில் வாகனங்களை நிறுத்துவோர், குறிப்பிட்ட காலத்துக்குள் வாகன ஆவணங்களை பெயர் மாற்றாமல் இருப்போர், வாகன ஆவணங்களைக் கேட்கும்போது வழங்காதோர், ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணிப்போர், பாதுகாவலர் இல்லாத தண்டவாளத்தை விதிகளை மீறிக் கடப்பவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து முதல் முறை ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.

> இதேபோல, பயணச்சீட்டு இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தாலோ, ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை சரிவர பணிபுரிய விடாமல் தடுத்தாலோ ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். பேருந்துகளில் பயணிகளை ஏற்ற மறுத்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

> சொந்த வாகனத்தை வாடகைக்கு அனுமதித்தாலோ அல்லது ஓட்டுநர் உரிமம் வாங்காமல் வாகனத்தை இயக்கினாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

> ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முறைகேடு செய்தாலோ, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது குற்றச்சாட்டுகளை மறைத்தாலோ ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

> மேலும், வாகனத்தை விதிகளை மீறி மாற்றியமைத்தால், ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்படும். ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கினால் முதல் முறை ரூ.1,000, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும்.

> இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேற்பட்டோர் பயணித்தால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். தடை செய்யப்பட்ட இடத்தில் தேவையில்லாமல் ஒலி எழுப்பினால் முதல் முறை ரூ.1,000, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும்.

> இதேபோல, பொது இடங்களில் காற்று, ஒலி மாசு ஏற்படும் வகையிலும், சாலைப் பாதுகாப்பை மீறியும் வாகனத்தை இயக்குவோருக்கு முதல் முறை ரூ.10 ஆயிரம், அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும்.

> கூடுதல் பாரத்துடன் கனரக வாகனங்களை இயக்கினால் ரூ.20,000 மற்றும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x