

சென்னை: அமைச்சரவை அனுப்பி வைக்கும் சட்ட மசோதாவை ஆண்டுக்கணக்கில் நிறுத்திவைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சட்ட விளக்கம் அளித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்துவந்தார். இறுதியாக, ஆளுநர் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றமே தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை மட்டும் கடந்த மே மாதம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு - 2022, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு - 2022, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு -1983, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்ட முன்வடிவு - 2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ளார். இவ்வாறு சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் எவ்வளவு காலத்துக்கு கிடப்பில் வைத்திருக்க முடியும் என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறியதாவது: மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஒரு சட்ட மசோதாவை அமைச்சரவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்தால் அதன் மீது ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின்படி, ‘கூடிய விரைவில்’ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.
அதற்காக அமைச்சரவை அனுப்பி வைக்கும் சட்ட மசோதாவை அரசியல் உள்நோக்கத்துடன் ஆண்டுக்கணக்கி்ல் நிறுத்திவைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. தமிழக சட்டப்பேரவை அனுப்பி வைத்துள்ள 21 மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேபோல கேரள ஆளுநரும், அம்மாநில அரசின் லோக்-ஆயுக்தா, பல்கலைக்கழக சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ல் உள்ள ‘கூடிய விரைவில்’ என்ற வரையறையை மாற்றி, ‘ஒரு மாதத்துக்குள்’ ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வகையில் காலவரையறை செய்து சட்டத்திருத்தம் கொண்டு வரக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யான பி.வில்சன், கடந்த பிப்ரவரியில் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். ஆனால், அந்த மசோதா மீது இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. திமுக எம்.பி.க்கள் அனைவரும் இதற்காக ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும். ஒருவேளை அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநர்கள் இதுபோல மாநில அரசுகளின் உரிமையில் தலையிட்டு, காலதாமதம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருமான ஏ.நடராஜன் கூறும்போது, “பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் குடிமையியல் பாடங்களில் ஆளுநர் வெறும் அலங்காரத் தலைவராகவே உள்ளார். குடியரசுத் தலைவருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் ஆளுநருக்கு உள்ளது என்றாலும் உண்மையான அதிகாரம் மாநில முதல்வர் மற்றும் அமைச்சரவைக் குழுவிடமே உள்ளது. மாநில நிர்வாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது ஆளுநரின் அடிப்படை கடமை. சட்டப்பேரவையை கூட்டுவது, ஒத்திவைப்பது, கலைப்பதற்கு அதிகாரம் படைத்த ஆளுநரின் அனுமதிக்குப் பிறகே எந்தவொரு சட்ட மசோதாவும் சட்டமாக மாறும். பண மசோதாவைத் தவிர்த்து மற்ற மசோதாக்களை சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும்.
ஆனால், மாநில சட்டப்பேரவை அந்த மசோதாவை திருப்பி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும். இதைத்தாண்டி ஆளுநர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பில் இருக்கும்போது அமைச்சரவை அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்த விதி ஆளுநரின் எல்லா அதிகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.”என்றார்.