Published : 08 Nov 2016 12:53 PM
Last Updated : 08 Nov 2016 12:53 PM

தென்னக நதிகளின் தாய்மடியான மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழல் பாதுகாக்கப்படுமா?

தென்னக நதிகளின் தாய்மடியாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இமயமலை, விந்திய சாத்புரா மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவையே முக்கியமான மலைத் தொடர் களாகும். இவற்றில் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையானது கன்னியாகுமரியில் தொடங்கி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் என 6 மாநிலங்களில் அமைந்துள்ளது. நர்மதை நதிக்கரையில் முடிவடையும் இந்த மலைத்தொடர் ஏறத்தாழ 1,600 கிலோமீட்டர் நீளமும், சுமார் 1.55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பும் கொண்டது.

நதிகளின் நீராதாரம்

நம் நாட்டின் வாழ்வாதாரங்களாகத் திகழ்பவை இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளாகும். ஏறத்தாழ 90 சதவீத நதிகளின் நீராதாரமாக இந்த மலைத் தொடர்களே திகழ்கின்றன. இமயமலையில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, யமுனா உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. பனி மலையான இமயமலையில் மழை பெய்யவில்லை என்றாலும், அங்குள்ள பனி உருகி, ஆறுகளில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் காவிரி, வைகை, கிருஷ்ணா, கோதாவரி, பாரதப்புழா, குந்திப்புழா, தாமிரபரணி, பவானி, சிறு வாணி உள்ளிட்ட ஏராளமான ஆறுகள் உற்பத்தியாகின்றன.

சோலைக்காடுகளும் புல்வெளியும்

இந்த மலைத் தொடரில் இன்னும் மனிதர் களால் காயப்படுத்தப்படாத இடங்கள் உள்ளன. சோலைக்காடுகளும், அவற்றுடன் இணைந்த புல்வெளியும் தாவரச் சூழலில் சிறப்பான இயற்கை அமைப்பைக் கொண்டதாகும். சுமார் 1,500 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள சிகரத்தின் உச்சியில்தான் இவை இருக்கும். பெரிய பசுமைப் பரப்பான இவை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. சோலைக்காடுகள் என்பவை முதிர்ந்தநிலைக் காடுகளாகும். இந்த புல்வெளியின் இயல்பு, மழை பெய்தால் பஞ்சுபோல மழைநீரை உறிஞ்சி, ஒரு மாதம் வரை தேக்கிவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும்.

சோலைக்காடுகளின் கீழ் மண்ணைப் பார்க்க முடியாத அளவுக்கு, இலை, தழைகள் மூடியிருக்கும். மரங்களின் கீழே சூரிய வெளிச்சம் விழாத அளவுக்கு நிழற்போர்வை இருக்கும். கீழே விழும் இலை, தழைகளை நுண்ணுயிர்கள் மண்ணாக மாற்றுகின்றன. இவ்வாறு பல லட்சம் ஆண்டுகளாக உருவான மண் இங்குள்ளது.

இமயமலைக்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சோலைக்காடுகள், புல்வெளிகளில் அடை மழையின்போதும் மண் அரிப்போ, வெள்ளப் பெருக்கோ ஏற்படுவதில்லை. தேக்கி வைத்துள்ள நீரிலும் சுமார் 5 சதவீதத்தை மட்டுமே சோலைமரங்கள் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள நீர் ஊறி ஊறி பாறை இடுக்கு களுக்குச் செல்கின்றன. அங்கிருந்து 2 மலைகள் சேரும் மலை இடுக்குகளுக்குச் சென்று ஊற்றாக வடிவெடுக்கின்றன.

சோலைக்காடுகள், புல்வெளி இருக்கு மிடத்தில் ஆண்டுமுழுவதும் வற்றாத ஓடைகள் இருக்கும். இதற்கு கோவை குற்றாலம் அருவி சிறந்த உதாரணமாகும். கடந்த 2015-ல் பல மாதங்கள் மழையில்லாதபோதும் கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

இவ்வாறு உருவாகும் 10, 15 ஓடைகள் சேர்ந்து சிற்றாறு உருவாகிறது. 50, 60 சிற்றாறுகள் ஒன்றிணைந்து நதியாக மாறுகிறது. இந்த வகையில் தென்னக நதிகளின் தாய்மடியாகத் திகழ்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 35 முதல் 50 நாட்களுக்கு மட்டுமே மழை பெய்கிறது. ஆனால், குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள் என ஆண்டுமுழுவதும் தண்ணீர் தேவைப்படுகிறது.

கோவை மாநகரின் தண்ணீர்த் தேவையை சிறுவாணி, பவானி ஆறுகள் பூர்த்தி செய்கின்றன. குடகுமலையில் உருவாகும் காவிரி தமிழகத்தின் விவசாயத் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. காவிரியில் இணையும் முக்கிய நதிகளான பவானி, மோயாறு, கபினி ஆகியவை நீலகிரி மாவட் டத்தில்தான் உருவாகின்றன. எனவேதான், மலைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

உயிர்சூழல் மையங்கள்

இதேபோல, உயிர்ச்சூழல் மையங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும். உலகில் 8 இடங்கள் அரிதினும் அரிதான உயிர்ச்சூழல் மையங்களாக (Global Bio diversity hottest hot spot) அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று.

இந்த மலைத் தொடரில் 654 வகை மரங்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை, உலகில் வேறெங்கும் காண முடியாதவையாகும். இதேபோல, ஏராளமான பாலூட்டிகள், ஊர்வன, நீர், நில வாழ்வன, வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள் என கணக்கிடலங்கா உயிரினங்களும் உள்ளன. இவற்றிலும் ஏராளமானவை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் மட்டுமே காணப்படுபவையாகும். இதேபோல, உலகில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகளும் இந்த மலைத்தொடரில்தான் உள்ளன. இங்கு மட்டும் சுமார் 10 ஆயிரம் யானைகள் இருக்கின்றன. மேலும், சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான புலிகளும் இங்குதான் உள்ளன. இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளதாகவும், அவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டும் 776 புலிகள் இருப்பதாகவும் 2014-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆதார உயிரினமான யானையும், உயிர்ச்சூழல் குறியீடான புலிகளும் இங்கு அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பசுமைப் பரப்புகள்

தற்போதைக்கு, உலகின் முக்கியப் பிரச்சினை பருவநிலை மாற்றமாகும். இதனால் வெப்பமயமாதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்கும் கவசமாக விளங்குபவை பசுமைப் பரப்புகளாகும். சோலைக்காடுகள், புல்வெளிகளில் குறிஞ்சிப் பூக்கள் பூக்கும். இவையே, சிறந்த உயிர்ச் சூழலின் அடையாளமாகும்.

மலைப் பகுதிகள் பழங்குடி மக்கள் மட்டுமே இருந்தவரை எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. ஆனால், பிரிட்டிஷ்காரர்களின் வருகையால் மலைப் பகுதிகளின் தன்மை மாறத் தொடங்கியது.

வெயிலால் பாதிக்கப்பட்ட வெள்ளையர்கள், ஐரோப்பிய நாடுகளின் தட்பவெப்பநிலைபோல இருக்கும் பகுதிகளைத் தேடியபோதுதான், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகள் அவர்களுக்குத் தென்பட்டன. அவர்கள் சோலைக்காடுகளுடன் இணைந்த புல்வெளிகளின் அருமை தெரியாமல், அவற்றை வீண் நிலம் என பதிவு செய்தனர்.

இதனால், தண்ணீரை உறிஞ்சும் தைல, சீகை மரங்களைக் கொண்டுவந்து மலைப் பகுதிகளில் நட்டனர். மேலும், சோலைக்காடுகளை அழித்து, தேயிலை, காபித் தோட்டங்களை உருவாக்கினர். அங்குதான், மலைப் பகுதிகளின் அழிவு ஆரம்பமானது.

நம் நாட்டைவிட்டு பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகும், இந்த நிலை மாறவில்லை. மரங்களை வெட்டுதல், கட்டிடங்களைக் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்தன. 1972-ல் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1980-ல் வனப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவரை, மரங்களை வெட்டுவதும், விலங்குகளை வேட்டையாடுவதும் பெருமளவில் நிகழ்ந்தது. எனினும், இந்த சட்டங்கள், வனத் துறைக்குச் சொந்தமான இடங்களை மட்டமே பாதுகாப்பவையாக இருந்தன. வனத் துறைக்குச் சொந்தமில்லாத நிலங்கள், கான்கிரீட் காடுகளாக மாறுவதைத் தடுக்க சட்டம் எதுவுமில்லை. மலைப் பகுதிகளில் ஏறத்தாழ 20 சதவீத பரப்புக்குமேல் கட்டிடங்களாக மாறிவிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் பாதிப்புக்கு கான்கிரீட் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

புறக்கணிக்கப்பட்ட பரிந்துரைகள்…

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, 1980-களின் இறுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர். 1987-ல் குமரியில் இருந்து ஒரு குழுவும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மற்றொரு குழுவும் புறப்பட்டு, 100 நாட்கள் பயணத்துக்குப் பின்னர் 1988 பிப்ரவரி 2-ம் தேதி கோவாவில் கூடியது. அங்கு, மலை பாதுகாப்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.

1986-ம் ஆண்டைய இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு விதியின்படி, சில இடங்களை உயிர்ச்சூழல் கூர்மைப்பகுதி என அறிவிக்க வேண்டுமென அந்தப் பிரகடனம் வலியுறுத்தியது. இதுவரை அதுபோல எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மீண்டும் 2008-ல் கோவாவில் கூடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீண்டும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர். 2009-ல் கோத்தகிரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற, அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், உரிய பரிந்துரைகள் இருந்தால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் எனத் தெரிவித்தார். இதையடுத்து ‘மாதவ் காட்கில் குழு’ என்ற குழு அமைக்கப்பட்டு, 2011-ல் அக்குழு தனது பரிந்துரைகளை, அரசிடம் சமர்ப்பித்தது.

அதில், மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில், மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வாழ்வாதாரம் சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்ட வளர்ச்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்ளவும், பிற பகுதிகளில் இயற்கைச் சூழலை அழிக்கும் எந்த திட்டத்தையையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகக் கூறி, இந்தப் பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்டன. இதையடுத்து அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு, 2013-ல் தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. அதன்படி, மலைப் பகுதியில் 3-ல் ஒரு பகுதியை உயிர்ச்சூழல் கூர்மைப் பகுதி என வரையறுக்க வேண்டுமெனத் தெரிவித்தது. இந்தக் குழுவின் பரிந்துரையும் அமல்படுத்தப்படவில்லை. இதன் பின்னணியில் இயற்கைக்கு விரோதமான, சுரங்க, சுற்றுலா செயல்பாட்டாளர்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தனி சட்டம் அவசியம்…

இது தொடர்பாக ஓசை அமைப்பின் தலைவரும், தமிழ்நாடு மேற்கு மலைத்தொடர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான க.காளிதாசன் ‘தி இந்து’விடம் கூறியது:

மலைகள் தான் நமது வாழ்வுக்கு ஆதாரமானவை. மலைப் பகுதிகளில் தொடர்ந்து உருவாகும் கட்டிடங்களும், சுற்றுலாவும், மலைக்காடுகளை ஒட்டிய பகுதிகளின் ஆக்கிரமிப்புகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. சோலைக்காடுகளும், புல்வெளியும் இல்லாவிட்டால், நமக்கு தண்ணீர் கிடைக்காது. கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இப்போதுள்ள பசுமை நிலையைப் பாதுகாத்தால்தான் இன்னும் 100 ஆண்டுகளுக்குத் தண்ணீர் கிடைக்கும். இதைத் தவறவிட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்.

எனவே, மலைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தபட்சம், தமிழக அளவிலாவது, மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் நடைபெறும் மலர்க் கண்காட்சிகளின்போது, ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுக்கின்றன. இவை, அப்பகுதிகளின் தாங்கு திறனைப் பாதிக்கின்றன. ஒரே நாளில் அனைவரையும் வரவழைப்பதை விட, ஆண்டுமுழுவதும் மக்களை வரவழைக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல, வன விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் கட்டிடங்கள் கட்டுவதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் மனித-விலங்கு மோதலைத் தடுக்க முடியும்.

அரிய உயிர்ச்சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் திட்டங்களையும், சமவெளிப் பகுதிகளில் செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களையும் மலைப் பகுதிகளில் செயல்படுத்தக் கூடாது. சுற்றுலாவை இயற்கை சுற்றுலாவாக மாற்ற வேண்டும். மலைப் பகுதிகளுக்கு ஏற்ற திட்டங்களை மட்டுமே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். அங்கு வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம், இயற்கை முறையில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் வழிவகுக்கும் வகையில் தனி சட்டத்தை இயற்ற வேண்டும். ஓசை அமைப்பு சார்பில் இதற்காக 16 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x