Published : 23 Nov 2016 10:04 AM
Last Updated : 23 Nov 2016 10:04 AM

உள்ளாட்சி 47: இரு ஆண்டுகள்... 45 கிணறுகள்... வறட்சியை விரட்டிய வடகரப்பதி கிராமம்!

பாலக்காடு அருகே பாலத்தில் நிற்கிறோம். கீழே பரந்த மணல்வெளியில் மலைப் பாம்பைப் போல ஊர்கிறது கல்பாத்தி ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் செந்தாமரைக்குளம் என்னும் இடத்தில் உற்பத்தியாகும் கல்பாத்தி, பாரதப்புழாவின் துணை யாறுகளில் ஒன்று. அது இங்கேதான் பாலக்காடு நகரைக் கடந்து மலம்புழா அணையை அடைகிறது. இங்கிருக்கும் கல்பாத்தி சிவன் கோயில் பிரசித்திப் பெற்றது. பூகோளரீதியாக திருவனந்தபுரத்தின் மறுமுனையில் அமைந்திருக்கிறது பாலக்காடு. திருவனந்தபுரத்தில் இருந்து மாறுபட்ட கலாச்சாரம் கொண்ட மண் இது. கிட்டத்தட்ட தமிழ கத்தைப் போலவே இருக்கிறது. பாதிப் பேர் தமிழ் பேசுகிறார்கள். இட்லி, தோசை, சன்ன அரிசிச் சோறு கிடைக்கிறது. கல்பாத்தி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகிறார்கள். மழை இல்லை. வெயில் சுடுகிறது. கடும் வறட்சி நிலவுகிறது. ஆனாலும், தங்கள் கடுமையான உழைப்பால் வறட்சியை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இதோ வடகரப்பதி கிராமம் வந்துவிட்டது.

பாலக்காடு நகருக்கு வெளியே கொழிஞ்சாம்பாறையை அடுத்து இருக்கிறது வடகரப்பதி கிராமப் பஞ்சாயத்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது வடகரப்பதி. தமிழகம் மழை மறைவுப் பிரதேசம் என்பதை அறி வோம். அந்த மழை மறைவுப் பிரதேசம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. நம்மைப் போலவே இவர்களும் வடகிழக்குப் பருவ மழையை நம்பி யிருக்கிறார்கள். கல் பாத்தியும் வரட்டாறும் வானம் பார்த்துக் காத்திருக் கின்றன. இந்தச் சூழலில்தான் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வறட்சியை விரட்டியிருக்கிறார்கள் மக்கள். சாதாரண உழைப்பு அல்ல அது; உயிரை பணயம் வைக்கும் உழைப்பு!

இங்கு அந்தத் திட்டத்தின் பொறி யாளராக இருக்கிறார் பாலமுருகன். திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர். “கேரளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மிக கண்டிப்புடன் நடத்து கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு நபர் வேலை கேட்டால் 15 நாட்க ளுக்குள் வேலையைக் கொடுக்க வேண்டியது கட்டாயம். இல்லை எனில் எத்தனை நாட்கள் அவருக்கு வேலை அளிக்கவில்லையோ அதற் கான கூலியில் 40 சதவிகிதத்தை எங்களது சம்பளத்தில் இருந்து தர வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.240 கூலி வழங்குகிறோம். நீர்நிலை களைப் பராமரிப்பது, சீரமைப்பது, கிணறுகள், பண்ணைக் குட்டைகள் அமைத்து புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவது போன்ற வேலைகளை நாங்கள் செய்துவருகிறோம்.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில் சரியான மழை இல்லை. ஆற்றில் தண்ணீர் கிடை யாது. ஆற்றுப் பாசனத்தை நம்பி யிருந்த விவசாயிகளின் நிலங்கள் வறண்டுவிட்டன. பலரும் தமிழகத் துக்கு கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார்கள். ஆனால், கிணற்றுப் பாசனம் செய்த விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெற்றார்கள். காலம் காலமாக அவர்கள் வைத்திருந்த மிகப் பெரிய கிணறுகள் அவர்களுக்கு கைகொடுத்தன. அப்போதுதான், ‘நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நாம் ஏன் கிணறுகளை வெட்டக்கூடாது?’ என்று தோன்றியது. ஆனால், எங்கள் திட்டத்தில் இயந்தி ரங்களுக்கு இடமில்லை. மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், பெரிய கிணறுகள் வெட்டுவது என்பது ஆபத்தான முயற்சி. மண் சரிவு போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் விளையும் என்று பயப்பட்டோம். அப்படி ஏதேனும் நடந்தால் மிகப் பெரிய அவப்பெயர் ஏற்படுவதுடன் திட்டத்தையே நிறுத்திவிடுவார்கள். நாங்கள் அனைவரும் வேலையை இழக்க நேரிடும்.

வடகரப்பதி பஞ்சாயத்துப் பணியாளர்கள். உள்படம்: குழந்தை தெரஸா

ஆனால், உள்ளூர் மக்களும் வடகரப்பதி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் குழந்தை தெரஸாவும் எங்கள் குழுவினருக்கு நம்பிக்கை அளித்தார்கள். தவிர, இந்த மக்கள் கடும் உழைப்பாளிகள். அவர்களின் துணையோடு பரிசோதனை முயற்சி யாக 2015, பிப்ரவரி மாதம் மேனோன் பாரா என்கிற இடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினோம். இந்தப் பகுதியின் பாரம்பரிய விவசாயிகள் சில அடிப்படைத் தொழில்நுட்பங்களை சொல்லித் தந்தார்கள். அதன்படி படிக்கட்டு தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து பாதுகாப்பாக வெட்டினோம். மாடு கட்டி ‘ஏற்றக் கமலை’ முறையில் மண் அள்ளினோம். கூடவே எங் களது பொறியியல் படிப்பும் கை கொடுத்தது. நாள் ஒன்றுக்கு ஒரு அடி தோண்டினோம். 20-வது நாள், 20-வது அடி தோண்டியபோது தண்ணீர் பீறிட்டது. 8 மீட்டர் அகலமும் 4 மீட்டர் நீளமும் கொண்ட எங்களது முதல் கிணற்றை அன்று வெற்றிகரமாக வெட்டி முடித்தோம்.

இது எங்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தது. விவ சாயிகள் பலரும் கூட்டமாக வந்து தங்கள் பகுதிகளில் கிணறு வெட்டக் கேட்டுக்கொண்டார்கள். அடுத்தடுத்து கிணறுகள் வெட்டத் தொடங்கினோம். உள்ளூர் மக்கள் முழுமையாக ஒத்துழைத்தார்கள். சராசரியாக மாதம் இரு கிணறுகள் வெட்டினோம். இதோ இதுவரை 45 கிணறுகளை வெட்டி முடித்துவிட்டோம். எங்கள் பூமியில் மீண்டும் பசுமை பூத்திருக்கிறது. காய்கறி, தக்காளி, வெங்காயம், இஞ்சி, நெல் பயிரிடுகிறோம். ஊரை விட்டு வெளியேறிய விவசாயிகள் திரும்ப வந்திருக்கிறார்கள்” என்றவர் தாங்கள் வெட்டிய கிணறுகளை அழைத்துச் சென்று காட்டினார்.

ஒவ்வொன்றும் பிரமாண்டமாக இருக்கின்றன. சராசரியாக 20 மீட்டர் அகலமும் 15 மீட்டர் நீளமும் கொண் டவை அவை. ஆழம் 30 முதல் 40 அடி வரை இருக்கிறது. ஒரு இடத்தில் புதியதாக ஒரு கிணற்றை வெட்டிக்கொண்டிருந்தார்கள். எட்டிப் பார்த்தோம். தலைசுற்றியது. ஆனால், சர்வசாதாரணமாக பெண்கள் ஏணிகளில் தொங்கிக்கொண்டிருக் கிறார்கள். போர்க்கால நடவடிக்கைப் போல பணிகள் நடக்கின்றன. ’ஏலேலா ஐலசா…’ சொல்கிறார்கள். அசாதாரணமான உழைப்பு அது!

“இதுவரை விபத்து எதுவும் நடந்ததில்லையா?” என்று கேட் டேன். நாங்கள் மிகக் கவனமாக செயல்படுகிறோம். இதுவரை ஒரு சிறு விபத்தோ, தவறோ நடக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுள் எங்களை பாதுகாக்கிறார்...” என்கிறார் பொறியாளர் பாலமுருகன்.

100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 2015-ல் மட்டும் இந்தக் கிராமத்தில் 3,179 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ரூ.2 கோடியே 82 லட்சத்து 58 ஆயிரம் கூலி வழங்கப்பட்டிருக்கிறது. 2016-ல் இதுவரை 2956 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

ரூ.3 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரம் கூலி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நபர் 1,000 கிலோ மண்ணை வெட்டி எடுக்கிறார். ஒரு கிலோவுக்கு 0.24 பைசா கூலி வாங்குகிறார்.

மீண்டும் ஒருமுறை உள்ளே எட்டிப் பார்த்தேன். கால்கள் தட தடத்தன.

“எப்படி துணிந்து இறங்கு கிறீர்கள்?” என்று உரக்கக் கத்தி னேன்.

பாதாளத்தில் இருந்து பதில் வந்தது, “வேற நிவரிட்டில்ல, ஜீவிக்க வேணுமே...” உழைத்துச் சாப்பிடுகிறார்கள் மக்கள்!

- பயணம் தொடரும்... | படங்கள்: மு.லட்சுமி அருண்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x