Published : 21 Oct 2022 07:21 AM
Last Updated : 21 Oct 2022 07:21 AM
சென்னை: பிரபல நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள வைரம் பதித்த விலை உயர்ந்த 2 கைக்கடிகாரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையில் 2012-ல் அடியெடுத்து வைத்த இவர், 2014-ல் தமிழில், ‘நிமிர்ந்துநில்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் என அடுத்தடுத்த படங்களில் நடித்துப் பிரபலமானார்.
பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பிரம்மாண்ட வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், இவர் பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்கள் பதித்த கைக்கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு கைக்கடிகாரம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன், விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளன. இதுகுறித்து பார்வதிநாயர் நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அவரது வீட்டில் 2 ஆண்டுகளாக வேலை செய்துவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ் (30) என்ற இளைஞர் மாயமாகி உள்ளார்.எனவே, அவர் நகை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பார்வதி நாயர் வீட்டில் அடிக்கடி விருந்து நிகழ்ச்சி நடக்குமாம். எனவே, விருந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் எவரேனும் கைவரிசைகாட்டினார்களா என்றும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT