Published : 08 Nov 2016 08:22 PM
Last Updated : 08 Nov 2016 08:22 PM

ஜி.வி.பிரகாஷ் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு இடைக்காலத் தடை

லிங்கா நஷ்டத்தை ஈடுசெய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா பிக்சர்ஸ் சினிமா தயாரிப்பாளரான சிங்காரவடிவேலன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. இப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். ஏற்கெனவே நடிகர் ரஜினி நடித்து வெளியான 'லிங்கா' படத்தின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதி விநியோக உரிமையை நான் பெற்றிருந்தேன். 'லிங்கா' படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.

திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதிலும் அப்போது வேந்தர் மூவீஸ் சார்பில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இப்பகுதியில் 'லிங்கா' படத்தை வெளியிட்டதன் மூலம் ரூ.6.5 கோடி வசூலித்து தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்ட சேலம் 7 ஜி சிவா, திரையரங்குகளில் ரூ. 6.5 கோடியை வசூலித்து விட்டு என்னிடம் ரூ. 5.88 கோடி மட்டுமே தந்தார். மீதி 62 லட்சத்தை தரவில்லை. இந்த சேலம் 7 ஜி சிவா தான் தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட உள்ளார். ஏற்கனவே 'லிங்கா'வில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யாமல் அவரின் இந்த புதிய படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது.

இந்த படம் வெளியிடப்பட்டால் எனக்கு வரவேண்டிய பணம் கிடைக்காது. எனவே 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இம்மனு மீதான விசாரணை இன்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்கு இடைக்கால தடை விதித்து, இந்த மனுவிற்கு தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் ராஜேஷ் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை இருவாரங்களுக்கு தள்ளி வைத்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x