

சென்னை: பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் சிக்கிமாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவுசெய்தது.
அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29-ம்தேதி உள்துறைச் செயலரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு மீதான கருத்துக்கேட்பு ஜூலை 29-ம் தேதி முடிவடைந்தது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.