Published : 21 Oct 2022 06:15 AM
Last Updated : 21 Oct 2022 06:15 AM

புயலால் தாமதமாக தொடங்கும் வடகிழக்கு பருவமழை; மகிழ்ச்சியில் மாநகராட்சி: வருத்தத்தில் மீனவர்கள்

சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னை மாநகராட்சிக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மீனவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கமாகத் தொடங்கும் நாளாக அக்.20-ம் தேதியை இந்திய வானிலை ஆய்வு மையம்நிர்ணயித்துள்ளது. அதை இலக்காகக் கொண்டு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. காலத்தோடு பணிகளை முடிக்க முடியாமல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடும் பணிகள் தொடர்கின்றன. இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டுவடகிழக்கு பருவமழை 20-ம் தேதிதொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிழக்கு திசைக் காற்றும் சற்று வீசத் தொடங்கியது. அடுத்த சில தினங்களில் பருவமழை தொடங்க வாய்ப்பிருந்த நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று 25-ம் தேதி வங்கதேச கடற்கரையை நெருங்கும். இந்த புயலின் தாக்கத்தால் காற்று வீசும் திசை முற்றிலும் மாறிவிடும். தமிழகத்தை ஒட்டிய கடல் பரப்பு ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிக்கொண்டு சென்றுவிடும். அதன் பிறகு இயல்பு நிலை திரும்பி, பருவமழை தொடங்க மேலும் சில நாட்கள் பிடிக்கும்.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகி இருக்க வேண்டும். கிழக்கு திசைக் காற்று ஈரப்பதத்துடன் வீச வேண்டும். சில தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும். இந்த அளவுகோல்களின் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது. அதனால் புயல் செயலிழந்து, சில நாட்களுக்கு பிறகேபருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கப்பட்ட நாளிலிருந்து தாமதம் எனக் கருதலாம். ஆனால் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது பெரிய தாமதம் இல்லை. கடந்த ஆண்டு 25-ம்தேதி, 2020-ல் 28-ம் தேதி, 2018-ல் நவ.1-ம் தேதி, 2016-ல்அக்.30-ம் தேதி பருவமழை தொடங்கியுள்ளது. 2019-ல் அக்.16-ம் தேதி, 2014-ல் 18-ம் தேதி என முன்னதாகவே தொடங்கியுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

புயலால் பருவமழை தாமதமாவது மாநகராட்சி அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் கேட்டபோது, ‘‘முதல் முன்னுரிமை மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. 2-ம் கட்ட முன்னுரிமை பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன. பருவமழை தாமதத்தை சாதகமாகப் பயன்படுத்தி நிலுவை பணிகளும் விரைந்து முடிக்கப்படும்’’ என்றார்.

இந்த ஆண்டு தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி வருகிறது. அன்றே அமாவாசை வரவில்லை. இதனால் இந்த ஆண்டுஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் அதிக அளவில் மீன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏராளமான மீனவர்கள் 22,23-ம் தேதிகளில் கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மீனவர் சங்கத் தலைவர் நாஞ்சில் பி.ரவி கூறும்போது, ‘‘இதுவரை மீன்வளத் துறையிலிருந்து எச்சரிக்கை எதுவும் வரவில்லை. வராமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மீனவர் செல்ல தடை விதிக்கப்பட்டால், தீபாவளி விற்பனையை நம்பி யுள்ள ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x