

சிவகாசி பேருந்து நிலையம் முதல் கேடிஆர் பாலம் வரை சாலையோரம் 20 கடைகள் அமைக்கவும், திருத்தங்கல் சாலையில் தற்காலிகக் கடைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பிரதான சாலைகளில் நடைபாதை கடைகள் அமைக்கத் தடை விதித்து கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பதிலாக திருத்தங்கல் சாலையில் தற்காலிகக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
மாநகராட்சி தடை விதித்த இடங்களில் நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்ததால் அதிகாரிகள் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகள் தர்ணா செய்தனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை அமைத்துக் கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கப் போலீஸார் நேற்று காலை எதிர்ப்பு தெரிவித்தனர்.
நடைபாதை வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை முற்றுகையிட்டு கடை அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து சிவகாசி நகர் காவல் ஆய்வாளர் சுபக்குமார், நடைபாதை வியாபாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் மேயர் சங்கீதா ஆலோசனை நடத்தினார்.
அதில் சிவகாசி பேருந்து நிலையம் முதல் கேடிஆர் பாலம் வரை சாலையோரம் 20 கடைகள் அமைக்கவும், திருத்தங்கல் சாலையில் தற்காலிகக் கடைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.