Last Updated : 04 Nov, 2016 03:02 PM

 

Published : 04 Nov 2016 03:02 PM
Last Updated : 04 Nov 2016 03:02 PM

பொலிவை இழக்கும் அமராவதி ஆறு: கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?

பல லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு கழிவுநீர் கலக்கப்படுவதால் அதன் பொலிவை இழந்து வருகிறது.

தமிழகத்தின் முக்கிய நீராதரங்களில் ஒன்றாக அமராவதி ஆறு உள்ளது. கேரள மாநிலத்தில் தொடங்கும் பாம்பாறு அமராவதி அணையை நிரப்புகிறது. அதன் பின் சுமார் 250 கி.மீ. பயணித்து காவிரியில் திருமுக்கூடல் என்ற இடத்தில் சங்கமிக்கிறது.

திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள பல லட்சம் மக்கள் இதனால் பயன்பெற்று வருகின்றனர். அமராவதி நகர் தொடங்கி, கல்லாபுரம், சாம்பல்மேடு, தாராபுரம் என 100-க்கும் மேற்பட்ட வழியோர ஊர்களில் வசிக்கும் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில், பழைய ஆயக்கட்டு வாய்க்கால்கள் (ராஜவாய்க்கால்கள்) முக்கிய பங்காற்றுகின்றன.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் சங்கராமநல்லூர், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர் பேரூராட்சிகள் உள்ளன. இவை அமராவதி ஆற்றின் கரைகளை ஒட்டியே அமைந்துள்ளன. அதே போல கொழுமம், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட ஊராட்சிகளும் அமைந்துள்ளன. மேற்படி பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வசிக்கின்றனர். இவர்கள் அன்றாடம் வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் திறந்தவெளி சாக்கடை கால்வாய்கள் மூலம் தாழ்வாக உள்ள அமராவதி ஆற்றில்தான் கலக்கிறது. இந்த போக்கு பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.

பாசனத்தேவைக்காக ஏற்படுத் தப்பட்ட ராஜவாய்க்கால்கள் பல இடங்களில் சாக்கடை கால்வாயாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த நகராட்சிகளுள் ஒன்றான தாராபுரத்திலும் நகர்ப்புற மக்கள் வெளியேற்றும் கழிவுநீர், அங்குள்ள ராஜவாய்க்கால்கள் வழியாக அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது.

33 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் சுமார் 70,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அன்றாடம் ஒரு கோடி லிட்டர் கழிவுநீரை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது.

இதனால், மக்களுக்கு வாழ்வளிக்கும் அமராவதி ஆறு மக்காத பாலிதீன் குப்பை, திடக்கழிவுகள், சாக்கடை கழிவுநீரை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குடிநீருடன் இந்த கழிவுநீரும் இரண்டற கலப்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. இதே நீரைத்தான் பல லட்சம் மக்களும் பருகும் நிலை உள்ளது.

இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சியில் 56,000 பேர் உள்ளனர். மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு கழிவுநீர் கலப்பால் அசுத்தப்படுவது உண்மைதான். பல ஆண்டுகளாகவே கழிவுநீர் கலப்பது நடைமுறையில் உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அதற்கான திட்ட அறிக்கை அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

அமராவதி அணையின் செயற்பொறியாளர் கொழந்தைசாமியிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் உள்ள மற்ற ஆறுகளை ஒப்பிடுகையில் அமராவதி ஆறு பரவாயில்லை என்று கூறலாம். அதிகளவிலான தொழிற்சாலைகள் இல்லை.

வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தான் அதிகம். இயற்கையான அதன் அமைப்பு காரணமாகவே கழிவுநீர் தாழ்வான ஆற்றை நோக்கி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது குறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல முறை ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x