Published : 24 Nov 2016 08:55 AM
Last Updated : 24 Nov 2016 08:55 AM

பழைய ரயில் தண்டவாளங்களை புதுப்பிக்க போதிய நிதி ஒதுக்க கோரிக்கை: 14 ஆண்டுகளில் 1,611 முறை ரயில்கள் தடம்புரண்டு விபத்து

நாடு முழுவதும் கடந்த 14 ஆண்டு களில் ரயில்கள் 1,611 முறை தடம் புரண்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய ரயில் தண்டவாளங்களைப் புதுப்பிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய ரயில்வே துறையில் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 12 ஆயிரம் பயணிகள் ரயில்கள் உட்பட மொத்தம் 21 ஆயிரம் ரயில்கள் தினமும் இயக்கப்படுகின் றன. மொத்தம் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

வெளியூர்களுக்கு பயணம் செய்யும் ஏழை, நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயில் போக்கு வரத்தையே விரும்புகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தூரில் இருந்து பாட்னாவுக்கு சென்று கொண்டிருந்த இந்தூர் - பாட்னா விரைவு ரயில் உத்தரப் பிரதேசம் கான்பூரில் அருகே தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில், 140 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப் பினும், விபத்து நடந்துள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் அல்லது ரயில் பெட்டியில் பழுது ஏற்பட்டு இருக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

2001-ல் மொத்தம் 279 ரயில்கள் தடம்புரண்டு விபத்துகள் ஏற்பட்டன. படிப்படியாக குறைந்து வந்த விபத்துகளின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, ரயில் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக டிஆர்டியு உதவித் தலைவர் இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரயில் போக்குவரத்தில் தண்ட வாளங்களைப் பராமரிப்பது முக்கியமான பணியாகும். ரயில் பாதை பராமரிப்பின்றி இருத்தல், பழைய தண்டவாளங்களை நீண்ட காலமாக மாற்றாமல் இருத்தல், அதிக எடை ஏற்றிச் செல்வதால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுதல் போன்ற காரணங்களால் ரயில்கள் தடம் புரள்கின்றன. எனவே, பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்த மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்பு 6 கி.மீ. தூரத்துக்கு 10 பேர் கொண்ட குழுவினர் (டிராக் மேன்) தண்டவாளங்களைப் பராமரிப்பார்கள். ஆனால், சிக்கனத்தைக் காரணம் காட்டி இந்த பிரிவில் பணியாட்கள் குறைக்கப்பட்டுவிட்டனர். டிராக் மேன் பிரிவில் முன்பு 3 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். தற்போது, 2 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, இந்த பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘12-வது ஐந்தாண்டு திட்டத்தில் மொத்தம் 12,468 கி.மீ. தூரம் ரயில் தண்டவாளங்களைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 6 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரயில் தண்ட வாளங்களை மேம்படுத்த மத்திய அரசிடம் ரூ.30 ஆயிரம் கோடி நிதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி கிடைத்தவுடன் பணிகள் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x