

சென்னை: எதிர்காலத்தில் 3.5 கோடி பயணிகளை கையாளவும், புதிய தொழில் முதலீடு களை ஈர்க்கவும் முடியும் என்று பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். பரந்தூர் விமான நிலையம் குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய உறுப்பினர்கள் செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), கோ.க.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), வேல்முருகன் (தவாக) ஆகியோர் விமான நிலையத்துக்காக விளை நிலங்கள் தவிர்த்து மாற்று இடங்களை எடுப்பதுடன், அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது: தற்போது சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகள் கையாளப்படுகின்றனர். இது 2028-ம் ஆண்டில் 3.5 கோடியாக உயர வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே 2009 முதல் 2019-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சென்னை விமான நிலையம் பயணிகளை கையாள்வதில் 9 சதவீத வளர்ச்சியே அடைந்துள்ளது. இதன்மூலம் 2008-ம் ஆண்டு பயணிகளை கையாள்வதில் 3-ல் இருந்த சென்னை விமான நிலையம் தற்போது 5-ம் இடத்துக்கு வந்துள்ளது. அதேநேரம் ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களின் விமான நிலையங்கள் பயணிகளை கையாள்வதில் சிறப்பாக உள்ளன. இதேபோல், சரக்கு போக்குவரத்தில் நாம் 7 சதவீதம் மட்டுமே கையாள்கிறோம். இரவில் மட்டும்தான் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்குபின் 10 கோடி பயணிகளை கையாள வேண்டிய தேவை இருக்கும். அதனால் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் புதிய விமான நிலையம் கட்டாய தேவையாகும். சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் நில மதிப்பீடு 306 ஏக்கர் வீதம் ரூ.10,500 கோடி வரை செலவு ஏற்படும். அந்தப் பகுதியில் கட்டிடங்கள் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால்தான் மாற்று இடங்களை நாட வேண்டியுள்ளது. அதன்படி பரந்தூர், பரனூர் உட்பட 11 பகுதிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு 4 இடங்களை தேர்வு செய்தது. அவற்றில் பரந்தூரின் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலைக் கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பொதுவாக திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளை பொருத்தவரை பெரும்பாலும் ஏரிகள், விளை நிலங்கள்தான் காணப்படும். எனவே, இந்த செயல்பாடு காலத்தின் கட்டாய தேவையாகும்.
புதிய விமான நிலையத்தால் தொழில் முதலீடுகள், விமான வழித்தடங்கள் வரும். தற்போது ரூ.100 செலவு செய்வதால் எதிர்காலத்தில் ரூ.325 வரவு கிடைக்கும். இதுசார்ந்த கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராமங்களின் மக்கள் வைத்த கோரிக்கைகள் முதல்வரின் கவனத்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் முடிவாகும். அதற்கேற்ப கையகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகளுக்கு சந்தை மதிப்பின் விலை, மாற்று வீடுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை வழங்க அரசு முன்வந்துள்ளது. மேலும், கம்பன் கால்வாய் போன்ற நீர்நிலைகளுக்கு சிக்கல் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.