

சென்னை: சாலைகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் செல்லும்போது வழிவிடத் தவறினால், இடையூறு ஏற்படுத்தினால் ரூ.10 ஆயிரம் விதிக்கப்படும் என தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், " ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது, வழிவிட தவறினால், அதற்கு இடையூறாக செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.
சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அபராதத் தொகைகளை உயர்த்தி இந்தப் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.