

சென்னை: நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகள் குறித்த பல்வேறு சரத்துகளின் ஒருங்கிணைந்த விளக்கம் மற்றும் கோட்பாடுகள் சட்ட நிபுணர் எம்.கே.நம்பியாரால் விதைக்கப்பட்டதாகும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழக சட்டப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.கே.நம்பியார் 2-வது நினைவு சொற்பொழிவு நேற்று முன்தினம் காணொலியில் நடைபெற்றது. அப்போது விரிவுரையாற்றிய தலைமை நீதிபதி, “1950-ம் ஆண்டு ஏ.கே.கோபாலன் சென்னை மாகாணம் வழக்கின் மூலம் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிய செயல்முறைகள் குறித்த நவீன அரசியலமைப்பு சட்டவியல் தோற்றத்தைக் வலியுறுத்தினார். ஆர்.சி.கூப்பர், மேனகா காந்தி, கோலக்நாத் மற்றும் பிற முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அவரது ஆழமான உரையில் பகுப்பாய்வு செய்தது சட்ட வல்லுநர்களுக்கு அரசியலமைப்பு பற்றிய ஒரு தெளிவை வழங்கியது” என்றார்.
நீதிபதி பி.என்.கிருஷ்ணா தனது தலைமை உரையிலும், நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டேவும், எம்.கே.நம்பியாரிடம் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது தொடக்க உரையில், புகழ் பெற்ற சட்ட நிபுணரும் – தந்தையுமான சட்ட நிபுணரின் நாட்டுப்புறத்திலிருந்து நகரம் வழியாக உச்ச நீதிமன்றம் வரையடைந்த அவருடைய குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான பயணத்தைக் குறிப்பிட்டார். மேலும் மூத்த வழக்கறிஞரும், சாஸ்த்ராவின் சட்டம் மற்றும் வளர்ச்சிக்கான சி.எஸ்.வைத்யநாதன் ஆய்வு இருக்கை நிறுவனருமான சி.எஸ்.வைத்யநாதன், துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.சாஸ்த்ரா பல்கலைக்கழக சட்டப் பள்ளி சார்பில் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட எம்.கே.நம்பியார் 2-வது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.