Published : 20 Oct 2022 06:27 AM
Last Updated : 20 Oct 2022 06:27 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடங்கியது: சிறப்பு பிரிவில் 65 பேருக்கு கல்லூரி ஒதுக்கீடு

சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. சிறப்பு பிரிவில் 65 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை பெற்றனர். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த நிலையில், இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடந்தது.

இதில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 46, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 11, விளையாட்டு வீரர்கள் பிரிவில் 8 என 65 இடங்கள் நிரம்பியுள்ளன. கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றுக்கான நேரடி கலந்தாய்வு, சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று நடக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 1,310 எம்பிபிஎஸ், 740 பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது. இதுதொடர்பான விவரங்களுக்கு https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x