உலக பொருளாதார சரிவு வந்தாலும் தமிழகத்துக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை
சென்னை: உலக பொருளாதார சரிவு வந்தாலும், மத்திய அரசைவிட தமிழகத்துக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக அரசின் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.3,796 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டன.
அதன் மீதான பதில் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பேசியதாவது: பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவித்த வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையைவிட இறுதிக்கணக்கில் கூடுதலாக குறைந்திருப்பதால், கடந்த ஆண்டு இருந்த 4.61 சதவீத நிதி பற்றாக்குறை, 3.38 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த கடன் எல்லைக்குள் குறைவாக வந்ததால் மாநிலத்தின் சுய மரியாதையையும், கடன் வாங்கும் சக்தியையும் அதிகரித்துள்ளோம். உலக பொருளாதார நெருக்கடி வரும் என்ற அச்ச சூழ்நிலை உள்ளது. அதுபோல வந்தால், தேவையான கடன் வாங்கும் திறனை உருவாக்கி உள்ளோம். கடன் பற்றாக்குறையை குறைத்ததால், ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டியை குறைத்துள்ளோம். 7 ஆண்டுகளாக சரிந்த பற்றாக்குறையை நிறுத்துவது சாதாரண காரியம் அல்ல. உலகிலேயே சிறப்பான ஆலோசனை பெறுவதால், முதல்வரின் பாதுகாப்பால் வரும் விளைவு இது. உலக பொருளாதார சரிவுவந்தால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, மற்ற மாநிலங்கள், மத்திய அரசைவிட தமிழகத்துக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
