

திருச்செங்கோடு அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (24). இவர் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் வீ்ட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இவருடன், இவரது தம்பியான தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பிரதீப் (21), திருக்கோவிலூரைச் சேர்ந்த உறவினர் நந்தகுமார் (21) ஆகியோரும் வந்துள்ளனர்.
காரை பிரசாந்த் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமரமங்கலம் அடுத்த எலிமேடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு அரிசி மூட்டை ஏற்றிச்சென்ற லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
அந்த விபத்தில் பிரசாந்த், பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நந்தகுமார் திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்ப வம் தொடர்பாக ராசிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குப்புசாமி என்பவரை எலச்சிபாளையம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.