தென்காசி பள்ளிச் சிறுவன் தற்கொலை வழக்கு: உடலை வாங்கிக்கொள்ள பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தென்காசி பள்ளிச் சிறுவன் தற்கொலை வழக்கு: உடலை வாங்கிக்கொள்ள பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தென்காசி அருகே தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவன் உடலை வியாழக்கிழமை காலைக்குள் பெற்று இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம். இவரது மகன் சீனு (12). அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அக்.14-ல் பள்ளிக்கு சென்ற சீனு, சிறுது நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். சேர்ந்தமரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி ஆசிரியர்கள் சிலர் சாதி பெயரைச் சொல்லி திட்டியதால் சீனு தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனுவின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். சீனுவின் உடலை வாங்க மறுத்து அரியநாயகிபுரத்தில் உறவினர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் 5 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீனுவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி ஆறுமுகம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதி குமார் சுகுமார குருப் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சடலத்தை வைத்து அரசியல் செய்வது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு. சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். மனுதாரரின் மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதால், மாணவன் உடலை இன்று காலை 10 மணிக்குள் பெற்று இறுதி மரியாதை செய்ய வேண்டும். தவறினால் மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறை சேர்ந்து மாணவனின் உடலை தகனம் செய்யலாம். இந்த வழக்கை விசாரிக்க டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியை தென் மண்டல ஐஜி நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in