Published : 19 Oct 2022 07:29 PM
Last Updated : 19 Oct 2022 07:29 PM

மதுரை புதுநத்தம் சாலையில் ‘சென்டர் மீடியம் கேப்’-களை குறைக்க கோரிக்கை - விபத்துகள் அதிகரிப்பதாகப் புகார்

வாகன ஓட்டி செல்லும் காட்சி

மதுரை: மதுரை-புது நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு திரும்புவதற்கு வழிநெடுக ‘சென்டர் மீடியம் கேப்’ அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை-நத்தம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரூ.1000 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த சாலையில் சொக்கிகுளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் செட்டிக்குளம் வரை 7.3 கி.மீ. பறக்கும் பாலம் அமைகிறது. இந்த சாலையில் அழகர் கோயில் தாமரைத்தொட்டி ஜங்ஷனில் ஆரம்பித்து ஊமச்சிகுளம் வரை, சாலையின் நடுவில் கம்பிகளைக் கொண்டு சென்டர் மீடியம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், நத்தத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு புறமாகவும், மதுரையில் இருந்து நத்தம் செல்லும் வாகனங்கள் மற்றொரு புறமாகவும் தனித்தனியாகச் செல்கின்றன. இடையில் சென்டர் மீடியம் இருப்பதால் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு வாகனங்கள் செல்ல முடியாது. இதுபோன்ற சாலைகளில் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு செல்வதற்கு வசதியாக ‘சென்டர் மீடியம் கேப்’ அமைக்கப்படும். குறைந்தப்பட்சம் இந்த சென்டர் மீடியம் கேப் 2 முதல் 3 கி.மீ., தொலைவுக்கு ஒரு இடத்தில் அமைக்கப்படுகிறது.

சமூக ஆர்வலர் கே. பெருமாள் கோன் கூறுகையில், ‘‘தாமரைத் தொட்டி ஜங்ஷன் சாலை இணையும் புதுநத்தம் சாலையில் இருந்து ரிசர்வ் லைன் ஆத்திக்குளம் ஒன்றரை கி.மீ. தொலைவு கொண்டது. இதில், 10 இடங்களில் சென்டர் மீடியம் கேப் வைக்கப்பட்டுள்ளது. சாலையில் வழிநெடுக இந்த திறப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு நுழைகிறார்கள். வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்குக் குறுக்கே திடீர் திடீரென்று வாகனங்கள் குறுக்காக பாய்வதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் சிறிய அளவில் காயங்களுடன் தப்பிவிடுவதால் இந்த விபத்துக்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

எந்த நேரத்தில் யார் சாலையில் குறுக்கே பாய்கிறார்கள் என்பது தெரியவில்லை. வாகன ஓட்டிகள் ஒரு வித பயத்துடனே மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தப்பட்சம் 3 கி.மீ., தொலைவில் 3 இடங்களில் சென்டர் மீடியம் கேப் இருக்கலாம். இந்த சாலையில் அரசு துறை அதிகாரிகள் அதிகம் வசிப்பதால் அவர்கள் வசதிக்காக இப்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியம் கேப் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல் பங்க், தனியார் நிறுவனங்கள், தியேட்டர், வசதிப்படைத்தவர்கள் என பலருக்காகவும் இந்த ‘கேப்’ விடப்படுகிறது. இந்த ‘கேப்’களை முறைப்படுத்தாவிட்டால் புது நத்தம் சாலையில் பேராபத்துகள் ஏற்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x